Showing posts with label ஓ பக்கங்கள். Show all posts
Showing posts with label ஓ பக்கங்கள். Show all posts

மரண அரசியல் !

பல வருடங்கள் முன்பு ஹிந்து பேப்பரில் ஒரு நாள் முழுப் பக்கமும் ஒரு பெரிய புகைப்படத்துடன் வந்திருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் மகன் அது என்ன என்று கேட்டான்.

அப்போது அவனுக்கு பத்து வயது. அது, இறந்துவிட்ட ஒரு தொழிலதிபருக்கு மரண அஞ்சலி விளம்பரம் என்றும் அதற்கு எத்தனை லட்சம் ரூபாய்கள் செலவாகிறது என்றும் அவனுக்கு விளக்கினேன். ``அப்பா, நீ செத்துப் போகும்போது நானும் உனக்காக இப்படி ஒரு முழுப் பக்கம் விளம்பரம் கொடுப்பேன்'' என்று வெள்ளந்தியாக தன் அன்பை வெளிப்படுத்தினான் அவன்.

பெரும் பத்திரிகைகளில் வெளியிடப்படும் மரண அஞ்சலி விளம்பரங்கள், கொஞ்சம் அன்பையும் நிறைய பணபலத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துபவை. அண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டல்களில் கொல்லப்பட்ட வர்த்தகத்துறைப் பிரமுகர்களுக்கான அஞ்சலி விளம்பரங்கள் பல நாட்கள் மும்பை ஆங்கில ஏடுகளை ஆக்கிரமித்தன.

ரயிலடியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி விளம்பரம் தரும் வசதியுள்ள உறவினர்கள், நண்பர்கள் குறைவு. அநேகமாக அவரவர் பகுதிகளில் 30க்கு 20 கறுப்பு சுவரொட்டிகள் சிலருக்குக் கிட்டியிருக்கலாம்.

பயங்கரவாதிகளுடன் மோதி இறந்த கமாண்டோ வீரர்கள், போலீஸ் அதிகாரிகள், கீழ் நிலைக் காவலர்கள் ஆகியோரின் உயிர்த் தியாகத்தைப் போற்றி எந்த நட்சத்திர ஓட்டலும், எந்த பெரும் தொழில் நிறுவனமும் பெரிய அஞ்சலி விளம்பரங்களை வெளியிடவில்லை. அவர்களுக்கெல்லாம் மும்பை நகரில் அஞ்சலிப் பலகைகளை வைத்தது, மீடியாவால் கடுமையாக திட்டப்பட்ட அரசியல்வாதிகள்தான்.

சரத்பவாரின் காங்கிரஸ், சிவசேனை, ராஜ் தாக்கரேவின் எம்.என்.எஸ் ஆகியவை பல சாலைச் சந்திப்புகளில் இறந்த போலீஸாரின் படங்களுடன் அஞ்சலிப் பலகைகள் வைத்தன. அவற்றிலும், பிடிபட்டிருக்கும் ஒரே ஒரு தீவிரவாதியைப் பிடிக்க உதவியாக, அவனுடைய துப்பாக்கிக் குழலையே கையில் பிடித்து குண்டுகளைத் தன் மார்பில் வாங்கி இறந்த சப்இன்ஸ்பெக்டர் துக்காராமின் படம், மிகச் சிலவற்றில்தான் இடம் பெற்றது.

மரண விளம்பரங்கள் ஒருவரின் பணபலத்தை மட்டுமே பொறுத்தவை. அதனால்தான், மறைந்த நண்பர் தினமணி ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் தன் பொறுப்பில் இதழ் வந்த சமயத்தில் யாருடைய மரணச் செய்தியையும் வெளியிடலாம் என்ற ஒரு நடைமுறையைச் செயல்படுத்தினார். இறந்தவர் பிரபலமாகவோ, பிரபலத்தின் உறவாகவோ நட்பாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி எண்ணற்ற சாமான்யர்களின் மரணச் செய்திகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.

மரணச் செய்தியை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு, பத்திரிகைகளுக்கு ஓர் அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வெளியிடுவது, வெளியிடாமலே இருப்பது, போகிற போக்கில் தெரிவிப்பது, விரிவாக பெரிய படங்களுடன் வெளியிடுவது, விமர்சனங்களுடன் வெளியிடுவது என்று பலவிதங்களில் பிரபலங்களின் மரணங்களை ஊடகங்கள் அணுகுகின்றன.

எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும் ஜாதி, மத, வர்க்க, வணிக அரசியல் சார்ந்துதான் பிறப்பு முதல் மரணம் வரை செய்தி வெளியிடுகின்றன.

இறந்த ஒரு பிரபலத்தைப் பற்றி மிக இழிவாக மரணச் செய்தி வெளியிடப்பட்டதை முதல்முறையாக இப்போதுதான் பார்த்தேன். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணமடைந்த செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஏறத்தாழ இருட்டடிப்பே செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். என்ன செய்வது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சமயத்தில் செத்துப் போனது அவருடைய தப்புதானே. அது கூட ஒரு சாக்குதான்.தாக்குதலுக்கு நடுவே கிரிக்கெட் செய்தி விரிவாகவே காட்டப்படத்தான் செய்தது.

இந்தியா டுடே இதழில் அதன் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பிரசன்னராஜன், வி.பி.சிங் பற்றி எழுதியது மிகவும் ரசக்குறைவானது. `இந்திய சமூகத்தையே சீர்குலைத்தவன் செத்து ஒழிந்தான், அப்பாடா!' என்பதுதான் அந்த சிறு கட்டுரையின் தொனி. வி.பி.சிங்கை இப்போது தகனம் செய்த தீ நமக்கு, அவர் கொண்டு வந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தீக்குளித்த (போதும் செத்து தியாகியாக முடியாமற்போன) ராஜீவ் கோஸ்வாமியைச் சுட்ட தீயை நினைவுபடுத்த வேண்டும் என்று வலிந்து எழுதுகிறார் பிரசன்னராஜன். ஆங்கில மொழியின் நயங்களைப் பயன்படுத்தி வி.பி.சிங்கை பிரசன்னராஜன் செய்த நக்கல், நையாண்டியெல்லாம், அதே இதழின் தமிழ் மொழிபெயர்ப்பில் நயங்களையும் இழந்து, அப்பட்டமான குரோதமாகப் பல்லிளிக்கிறது.

இந்திய சமூகத்தை வி.பி.சிங் பிளவுபடுத்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய். அவரா ஜாதிகளைக் கண்டுபிடித்தார்? வர்ணாசிரமத்தை உருவாக்கினார்? ஏற்கெனவே பிளவுபட்டும் ஏற்றத்தாழ்வுகளுடனும் இருக்கும் ஜாதீய சமூகத்தில், சம நிலையை ஏற்படுத்துவதற்கான முயற்சியை எடுத்தவரா, பிளவுபடுத்துபவர்?

ஜாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் இவற்றில் ஆழ்ந்த பிடிப்பு இருக்கும் எவரும் வி.பி.சிங் மீது வெறுப்பு காட்டுவதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் எந்தப் பதவியை வகித்தபோதும் இவற்றுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தார். நடவடிக்கைகள் எடுத்ததால், பதவி பறிபோகும் என்றால் அவர் அது பற்றிக் கவலைப்படாமல் பதவிகளை இழந்தார்.

அவர் உ.பி. முதலமைச்சராக இருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயண் வழிகாட்டுதலில் சம்பல் கொள்ளைக்காரர்களை சரண் அடையச் செய்ய முயற்சி எடுத்தார். அது பிடிக்காதவர்கள் அவர் சகோதரரையே கொன்றார்கள். அதற்காக அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ராஜீவ் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோது வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர்கள் கிர்லோஸ்கர், லலித் மோகன் தாப்பர் ஆகியோரை துணிச்சலாகக் கைது செய்தார். அதனால் துறை மாற்றப்பட்டு ராணுவ அமைச்சரானார். அங்கே நீர்மூழ்கிக் கப்பல் பேர ஊழல், பீரங்கி பேர ஊழல்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தார். அதனால் ஆட்சியை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று.

பி.ஜே.பி., இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரித்ததில் அவர் பிரதமரானபின், அத்வானியின் மதவெறி ரத யாத்திரையைத் தடுத்து நிறுத்தினார். தமிழ்நாட்டிலும் சில மாநிலங்களிலும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்தபோதிலும் சுதந்திரம் பெற்று 40 வருடங்களாகியும் மத்திய அரசில் அது இருக்கவில்லை. மண்டல் கமிஷன் அடிப்படையில் அதை அறிமுகப்படுத்தினார். இதனால் பி.ஜே.பி. ஆதரவை திரும்பப் பெற்றதில் பிரதமர் பதவி போயிற்று.

வி.பி.சிங் கவலைப்படவில்லை. பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக மும்பையில் நடந்த கலவரங்களையடுத்து மத நல்லிணக்கத்துக்காக அவர் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்ததில் அவர் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. ரத்தப் புற்று நோயும் இருந்தது. அன்றாட கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி, மக்கள் இயக்க அரசியலில் இயங்கிவந்தார். மறுபடியும் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்ததால்தான் குஜ்ராலும் தேவ கவுடாவும் பிரதமராக முடிந்தது.

பதவிகளைப் பொருட்படுத்தாமல் கொள்கை அடிப்படையில் மட்டுமே இயங்கிய அபூர்வமான மனிதர் அவர். அதனால்தான் அவர் தேசிய முன்னணி அமைத்து அதன் வழியே பிரதமரானபோது, தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபா எம்.பி.கூட தேர்தலில் கிட்டாதபோதும், ஃபெடரலிசக் கொள்கை அடிப்படையில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கினார்.

கவிஞராகவும் ஓவியராகவும் நுட்பமான உணர்வுகளுடன் இயங்கிய அவர், தனி வாழ்க்கையில் மிக எளிமையானவர் என்பதை அவருடைய மொழிபெயர்ப்பாளனாக தேசிய முன்னணி தொடக்க கால மேடைகளில் செயல்பட்டபோது நேரில் நான் அறிந்தேன். நண்பர் ஜெகவீரபாண்டியன் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தியதால் எனக்குக் கிட்டிய அனுபவங்கள் என் வாழ்க்கையின் இனிமையான தருணங்களில் முக்கியமானவை. மேடைகளில் அவர் சொன்ன குட்டிக்கதைகள் தொகுக்கப்பட்டால் அருமையான வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

தமிழகத்தில் பெரியார் பணியாற்றி இட ஒதுக்கீட்டுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது போல வடக்கே யாரும் செய்யவில்லை என்பதால்தான் மண்டல் கமிஷன் அமலாக்கத்துக்கு எதிர்ப்பை வி.பி.சிங் சந்திக்க வேண்டி வந்தது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பெரியார் முழுமையாக மொழிபெயர்க்கப்படவே இல்லை என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பெரியார் பார்வையும் லோஹியா பார்வையும் கலந்த ஓர் சமூக அரசியலை வடக்கே பரப்ப அவர் முயற்சித்தார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்பது _ அவர் காலத்துக்குப் பின் இன்று பி.ஜே.பி உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிராகரித்து அரசியல் செய்யமுடியாது என்ற நிலையை அவர் ஏற்படுத்தியதுதான். ராஜீவ் கொலையும் உடல் நலிவும் நிகழ்ந்திராவிட்டால். வி.பி.சிங் 1991_ல் மீண்டும் பிரதமராகியிருப்பார். இந்திய அரசியல் மிக ஆரோக்கியமான வழியில் சென்றிருக்க முடியும்.

வாரிசு அரசியல், குடும்ப நலன், ஊழல் செய்து சொத்துக் குவிப்பு எதையும் செய்யாத நேர்மையாளரான வி.பி.சிங்குக்கு இவற்றில் திளைக்கும் தி.மு.க.வும் பெரியாரை தனிச் சொத்தாக பாவிக்கும் தி.க.வும் வி.பி.சிங்கின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செலுத்தும் அஞ்சலிகளை விட, அவருடைய எதிரிகளின் சார்பாக இந்தியா டுடே பிரசன்னராஜன் எழுதியிருக்கும் கண்டனம்தான், வி.பி.சிங் யார் என்பதைச் சரியாக அடையாளப்படுத்தும் மிகச் சிறந்த புகழுரையாக அமைகிறது..

இந்த வார பூச்செண்டு

வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் சார்பில் எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என்று பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி வரும் வேளையில், அப்படி மறுப்பது தொழில் தர்மத்துக்கு முரணானது என்றும் கசாப் கேட்டுக் கொண்டால் தான் ஆஜராவேன் என்றும் ராம் ஜெத்மலானி அறிவித்திருப்பதற்காக இ.வா.பூச்செண்டு. கசாப் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக் கொண்டிருப்பதால் தண்டனை நிச்சயம்; மரண தண்டனைக்கு பதில் ஆயுள் தண்டனையை கோரிப் பெற தான் வாதாட இயலும் என்று ராம்ஜெத் மலானி தெரிவித்திருக்கிறார்.

இந்த வார கேள்வி

திருச்சி பகுதியில் சிறு தொழிற்சாலைகள் 55 சதவிகித மின்வெட்டில் திணறிக் கொண்டிருக்கையில், ஸ்டாலின் உறையூரில் பேசும் பொதுக் கூட்டத்துக்காக ஐந்து கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை நெடுக டியூப் லைட்டும் அலங்கார விளக்குகளுமாக செய்திருக்கும் அட்டகாசத்தை நேரில் கண்டேன். அருவருப்பாக இருக்கிறது. திருந்தவே மாட்டீங்களா

Read more...

பயங்கரவாதிகளை அத்வானி ஒப்படைப்பாரா ?

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு ஆங்கில டி.வி. சேனலும் விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, பயங்கரவாதத்தை ஒழித்தே தீருவோம்;பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முழங்குகிறார்கள்.

என்ன செய்யப் போகிறார்கள்? தாங்களே தனியாக உளவு அமைப்புகளை உருவாக்குவார்களா? கமாண்டோக்களை ஒவ்வொரு நட்சத்திர ஓட்டலிலும் நிறுத்தி வைப்பார்களா? முப்படைகளையும் வழி நடத்துவார்களா?

ம்ஹூம். இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடு வதை எல்லா குடிமக்களையும் சேனல்களால் செய்யவைக்க முடிந்தால் அதுவே பெரிய சாதனை தான். தாஜ், ஓபராய் ஓட்டல்கள் இருக்கும் தென் மும்பை மக்களவைத் தொகுதியில் சென்ற தேர்தலில் ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஓட்டுக்களைப் போல இரு மடங்கு வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டே போடவில்லை!

பயங்கரவாதம் ஒன்றும் மூளையில்லாதவர்களால், முரட்டுத்தனமாக அவிழ்த்து விடப்படும் வன்முறை அல்ல. அது நன்றாக சிந்தித்து, திட்டமிட்டு சில நோக்கங்களுடன் செய்யப்படும் இன்னொரு அரசியல் வடிவம்.

இந்த அமைப்பில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குமுறுபவர்களின் அரசியல் அது. அதிருப்தி, ஆதங்கங்களுக்கு சில சமயங்களில் நியாயங்கள் இருக்கலாம். பல சமயங்களில் துளியும் நியாயங்கள் இல்லாமலும் இருக்கலாம். அதிருப்தியை வெளிப்படுத்துகிற மொழி வன்முறை. அது தீர்வல்ல. கையில் எடுத்தவரையும் சேர்த்து அழிக்கக்கூடியது. ஆனால் ஜனநாயகத்தில் பல்வேறு பிரிவினரையும் ஒரு சமரசப்புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டிய அரசு தவறும்போது, அதிருப்தி வன்முறையாகத்தான் வெளிப்படும்.

ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஜனநாயகத்தைத் தொடர்ந்து சீரழிக்கும்போது, பயங்கரவாதம் உருவாகியே தீரும். அது வெடிக்கும்போது ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் செலவிலேயே தங்கள் பாதுகாப்புக்கு மேலும் மேலும் ஆயுதங்களைக் குவித்துக் கொள்வார்கள்.

ஏற்கெனவே வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ராணுவத்துக்குச் செலவிடுகிறோம். மும்பைத் தாக்குதலைக் காரணம் காட்டி இன்னும் பல நூறு கோடிகள் செலவுக்கு அரசு இயந்திரம் நம்மை தலையாட்ட வைக்கிறது. ராணுவம் செயல்படும் விதம், அதன் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு தேசபக்தி சாமியாட்டம் மீடியா உதவியுடன் உடுக்கையடிக்கப்படுகிறது.

ஊழல் அமைப்பில்தான் பயங்கரவாதம் தழைக்க முடியும். 1993-ல் மும்பை குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ் வெளியிலிருந்து கடத்தி வரப்பட்டது. கடத்தலுக்கு உதவி செய்தவர் ஊழல் பேர்வழியான கஸ்டம்ஸ் அதிகாரி. குஜராத் முதல் ராமேஸ்வரம் வரை எல்லா மீனவர்களுக்கும் போட்டோ ஐ.டி அட்டை கொடுத்துவிட்டால் போதுமா? காசு வெட்டினால் எத்தனை பெயரில் வேண்டுமானாலும் ஐ.டி. கார்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை பயங்கரவாதம் தழைக்கும்.

பயங்கரவாதத்தின் வேர்கள் வெளிநாட்டிலும் இன்று உண்டு. இப்போது மாறிய உலகச் சூழலில், நம் சார்பாக பாகிஸ்தானை மிரட்டும் வேலையை அமெரிக்கா எடுத்துக் கொண்டு விட்டது.

ஆனால் உள்நாட்டில் பயங்கரவாதத்தின் வேர்கள் என்ன? உள்ளூர் ஆதரவு இல்லாமல் எந்த பயங்கரவாதமும் தழைக்க முடியுமா?

இந்தியாவில் இதுவரை நடந்திருக்கக்கூடிய பயங்கரவாத வன்முறைகளில் வடகிழக்கு பிரிவினை இயக்கங்கள், கிழக்கிலிருந்து தெற்கு வரை நீண்டுள்ள செவ்விந்தியாவின் மாவோ இயக்கங்கள் சார்ந்த வன்முறைகள் எல்லாமே மதச் சார்பற்றவை. அவற்றின் அடிப்படை சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

காஷ்மீரிலும் பஞ்சாபிலும் மட்டுமே மதம் அடிப்படையாக இருந்தது. அதிலும் பஞ்சாபில் ஜனநாயக வழிமுறைகள் தழைத்தபின்னர், காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கான உள்ளூர் ஆதரவு இல்லாமற் போய்விட்டது.

காஷ்மீர் வன்முறைகள் பற்றிய இரு அம்சங்கள் நம் கவனத்துக்குரியவை. காஷ்மீரில் பாகிஸ்தான் உதவியுடன் மதச் சாயத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாதங்களுக்கு காஷ்மீருக்கு வெளியே இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முஸ்லிம் இந்தியர்களின் ஆதரவைத் திரட்டவே முடியவில்லை என்பது முதல் அம்சம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் சார்பாக இந்தியாவின் பிற பகுதிகள் எதிலும் பயங்கரவாதம் நடத்தப்படவில்லை என்பது இரண்டாவது அம்சம்.

பஸ், ரயில், மார்க்கெட் குண்டு வெடிப்புகள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடக்கும் நிலை ஏற்பட்டது அண்மையில்தான். சரியாக கடந்த 15 வருடங்களில்தான்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்த நிலை உருவானது.

சுதந்திர இந்தியாவின் முதல் மிகப்பெரிய பயங்கரவாதச் செயல் என்பது பாபர் மசூதி இடிப்புதான். அதைக் கண்டிக்கும் பலரும் கூட இன்று வரையில் அதை ஒரு பயங்கரவாதச் செயல் என்று நிர்ணயித்ததில்லை. குஜராத்தில் நடந்த முஸ்லிம் படுகொலைகளைக் கண்டிக்கும் எவரும், அதையும் ஒரு பயங்கரவாதச் செயல் என்று இன்றளவும் நிர்ணயிக்கவில்லை. பாபர் மசூதி இடிப்பையும் குஜராத் படுகொலைகளையும் பயங்கரவாதம் என்று சொல்லத்தவறியதுதான் இன்று நம்மை மும்பை கொடூரத் தாக்குதல் வரை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

இரு பயங்கரவாத நிகழ்ச்சிகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் முன்னணியில் நின்று தங்கள் ஆவேசமான தொண்டர்குண்டர்களைத் தூண்டிவிட்டார்கள். இரு நிகழ்ச்சிகளிலும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. இரு நிகழ்ச்சிகளுமே கமாண்டோ வந்துதான் தடுக்க வேண்டும் என்றில்லை. போலீஸே தடுத்திருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்தான்.

இன்றுவரை ஒரு அரசியல் வாதியும் ஒரு அதிகாரியும் இந்த நிகழ்ச்சிகளுக்காக தண்டிக்கப் படவிலை. நட்சத்திர ஓட்டல் தாக்குதலுக்காக, எரிகிற கூரை மீது ஏறி கூக்குரலிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளை காவு வாங்கிய மீடியா இதற்கு முந்தைய பயங்கரவாதங்களுக்கு யாரையும் பதவி நீக்க வைக்கவில்லை.

தன்னிடம் இருக்கும் பயங்கரவாதிகளை நம்மிடம் ஒப்படைக்கவேண்டுமென்று மிக நியாயமாகவே நாம் பாகிஸ்தானிடம் கோருகிறோம். அதே நேரம் நம் மண்ணிலேயே இருந்துகொண்டு ஜனநாயகத்தில் பங்கேற்றுக் கொண்டு சுதந்திரமாக உலா வரும் பயங்கரவாதிகளை நாம் ஒன்றும் செய்யவில்லை.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களுக்கு சில உள்ளூர் முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்டுவது சாத்தியப்பட்டிருக்கிறது.

ஏனென்றால் பாபர் மசூதி இடிப்பு சராசரி முஸ்லிம் இந்தியனைக் குழப்பியது; கலவரப்படுத்தியது; அச்சமூட்டியது. இந்தியாவின் ஒரு பெரிய அரசியல் கட்சி பகிரங்கமாகவே ஒரு முழுச் சமுதாயத்துக்கு எதிராக பேசியது. கடவுள் ராம் பெயரால், மசூதியை இடித்தது. அதை இன்னொரு பெரிய அரசியல் கட்சி கையாலாகாத்தனத்துடன் வேடிக்கை பார்த்தது. இந்தச் சூழல் சராசரி மைனாரிட்டி மனிதனின் மனதில் ஏற்படுத்திய கலவரத்தை, பயத்தை, உலகின் எந்த மூலையில் இருக்கும் எந்த மெஜாரிட்டி மதத்தினராலும், மொழியினராலும் ஒருபோதும் முழுமையாக உணரவே முடியாது. இந்த மனநிலையை எந்தச் சமூக விரோதசக்தியாலும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இத்தகைய மோசமான சூழலிலும், கோடானுகோடி முஸ்லிம் இந்தியர்களில் சில நூறு பேர்களே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றிருக்கிறார்கள் என்பது, மீதி அத்தனை பேருக்கும் இந்தியா மீதும் அதன் ஜனநாயகத்தின் மீதும் தொடர்ந்து இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் போற்றுதலுக்குரிய அடையாளமாகும். அவர்களுடைய பிரச்னை எப்போதும் உணவு, உடை, வீடு, என்ற அடிப்படைப் பிரச்னைதானே தவிர மத உணர்ச்சி அல்ல.

ஆனால் அவர்களை தினமும் மன உளைச்சலுக்கு நாம் ஆளாக்கி வருகிறோம். தமிழகத்தில் இந்து முன்னணியினர் தங்கள் கோயிலை தாங்களே உடைத்து தங்கள் அலுவலகத்துக்குத் தாமே குண்டு வைத்து பழியை பிறர் மீது போடச் செய்யும் சதிகள் அம்பலமாகியிருக்கின்றன, மாலேகனில் காவி நிறத்தின் பயங்கரவாதம் அம்பலமாகியது. ஆனால் எதிர்காலப் பிரதமர்களும் அவர் கட்சித் தலைவர்களும் இந்த சக்திகளை பகிரங்கமாக ஆதரித்துப் பேசித்திரிகிறார்கள்.

இந்தியாவில் ஜிஹாத் பெயரால் நடக்கக்கூடிய பயங்கரவாதத்துக்கு உள்ளூர் ஆதரவு துளியும் இல்லாத நிலை வரவேண்டுமென்றால், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதிகளை நாம் முதலில் தண்டித்தாக வேண்டும்.

பச்சையாக சொல்வதானால், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு இப்போது அத்வானியுடையதுதான்.

அவர் இப்போதேனும் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தன் தோழர்கள் செய்த ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் தேசத்திடம் ஒப்புக்கொண்டாக வேண்டும். குஜராத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய போலீஸ் உதவியுடன் சங்கப் பரிவாரம் நடத்திய படுகொலைகள் பயங்கரவாதம்தான் என்று அத்வானி ஒப்புக் கொள்ளவேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அத்வானி முன்வரவேண்டும். தன் கட்சி பாபர் மசூதியை மறுபடியும் கட்டித் தரும் என்று அவர் அறிவிக்க வேண்டும். இப்படி அத்வானி சுயவிமர்சனம் செய்துகொண்டு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கோரினால்தான், சராசரி முஸ்லிம் இந்தியருக்கு இந்த நாட்டின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை தொடரும். குழப்பமும் வெறுப்பும் அடைந்திருக்கும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய தலைமுறை இளைஞர்களை தெளிவுபடுத்தி மறுபடியும் இந்தியா நம்முடையதுதான் என்ற நம்பிக்கையை ஊட்ட மூத்த முஸ்லிம் இந்தியர்களுக்கு இது உதவும்.

தன் மதவாதக் கொள்கைகளை முழுக்க கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, பிரிட்டன் போல இரு பெரும் கட்சி முறையில் தன்னை கன்சர்வேடிவ், ரிபப்ளிகன் கட்சி போல வடிவமைத்துக் கொள்ள இதுவே பி.ஜே.பிக்கு வாய்ப்பு. இரு அனைத்திந்திய வலதுசாரிக் கட்சிகள், பலமான இடதுசாரிக் குழுக்கள் என்ற நிலை இந்திய ஜனநாயகத்துக்கும் ஆரோக்கியமானது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னால் அத்வானி தங்கள் பரிவாரத்தின் பயங்கரவாதத்துக்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். நான்கு மாநில தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் கற்கவேண்டிய இன்னொரு பாடம் இது. பயங்கரவாதத்துக்கு எதிரான கட்சி தன்னுடையதுதான் என்ற அவர் வாதத்தை மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதியையும் சகிக்கமாட்டோம் என்று முழங்கும் சேனல்கள், மோடிகளையும் தொகாடியாக்களையும் சட்டத்திடம் ஒப்படைக்கும்படி அத்வானியைக் கோரவேண்டும். கோருவார்களா?

Read more...

குசேலன் யார்? கிருஷ்ண பரமாத்மா யார்?


குசேலன்' படத்தில் ஏழை குசேலன் யார்? கிருஷ்ண பரமாத்மா யார்? பசுபதி நடித்த ஏழை பார்பர் பாலகிருஷ்ணன் பாத்திரம்தான் குசேலன்; ரஜினி நடித்த பணக்கார சூப்பர் ஸ்டார் அசோக் குமார்தான் கிருஷ்ணன் என்று படம் பார்க்கும் முன்பு தோன்றும். ஆனால், படத்திலே ஒரு வசனத்தில் ரஜினி சொல்வார். குசேலனாக இருந்த என்னைக் குபேரனாக்கிய கிருஷ்ணன் என் பள்ளித் தோழன் பாலகிருஷ்ணன் என்று. 

`குசேலன்' படமும் ஏற்கெனவே குபேரனாகிய ரஜினியை அதிகுபேரனாக்கியிருக்கிறது. குபேரர்களாக இருந்து வந்த தமிழகத்தின் பலதிரையரங்க உரிமையாளர்களை குசேலர்களாக்கி விட்டது. படம் வணிக வெற்றியைப் பெறாததால் அவர்களுக்கு இந்த கதி; படம் பெரும் வசூலைக் குவிக்காதபோதும் ரஜினியின் வருவாய்க்குக் குறைவில்லை. எப்படி இந்த விசித்திரம் நிகழ்ந்தது?



சினிமாக்காரர்களுக்கு உயர்வு நவிற்சிப் பட்டப் பெயர்கள் என்றால் பிடிக்கும். நேற்று வந்த குழந்தை நட்சத்திரத்துக்குக் கூட மினி சூப்பர் ஸ்டார், கவர்ச்சிப் புயல் என்றெல்லாம் பெயர் வைத்துவிடுவார்கள். நடிப்புப் புயல், இசைப் புயல், வசனப் புயல், வசூல் புயல் என்றெல்லாம் நிறைய புயல்கள் வீசுவது வழக்கம்.

`குசேலன்' படத்துக்கு சுனாமி என்று பெயர் சூட்டினால் எந்த மிகையுமில்லாத பொருத்தமான பெயராக  இருக்கும். மீனவர்கள் இரவும் பகலுமாக தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் கடலில் வீசிய சுனாமியே எப்படி அவர்கள் வாழ்க்கையை தடம் புரள வைத்ததோ, அதே போல சினிமா கொட்டகையையே தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாக வைத்திருந்த பல கொட்டகை உரிமையாளர்களின் வாழ்க்கையை `குசேலன்' படம் புரட்டிப்போட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் ரஜினி பட தயவில் பெரும் வசூலைப் பார்த்துவந்த கொட்டகைக்காரர்களுக்கு இந்த ரஜினி படமே சுனாமியாகிவிட்டது. 

அதனால்தான் இதுவரையில் சினிமா உலகில் ஒலிக்காத ஒரு கோரிக்கை இப்போது ஒலிக்கிறது. படத்தால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு படத்தின் ஹீரோ நஷ்ட ஈடு தரவேண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்களும் கொட்டகை உரிமையாளர்களும்! (ஒரு படத்தால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு ஒவ்வொரு ரசிகரும் நஷ்ட ஈடு கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?!)

அண்மைக் கால ரஜினி படங்களில் என் பூச்செண்டுக்குரியதாக  இருக்கும் குசேலனின் பட வணிகத்தில் அப்படி என்ன குளறுபடி நடந்தது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. நல்ல படங்கள் வருவதற்கான தடை, வந்தாலும் தோற்பதற்கான சிக்கல்களின் வேர்களை எப்போதும் தேடவேண்டியிருக்கிறது.

சினிமாவில் அசல் வரவு செலவுகள், அசல் லாப நஷ்டங்கள், அசல் கணக்குகள் எல்லாவற்றையும் ஒருவர் கண்டறிவது எளிதானதல்ல. இதைமீறி அறியவந்த செய்திகள் சினிமா துறையின் வணிக முறைகள் தொடர்ந்து பேராசை, சூதாட்டம் என்ற இரு குதிரைகள் மீது சவாரி செய்யும் அவலத்தையே உணர்த்துகின்றன.

தன் குருநாதர் கே.பாலசந்தருக்கு உதவும் நோக்கத்துடன் கவிதாலயாவுக்கு ஒரு படம் செய்ய ரஜினி முன்வந்ததில் குசேலபுராணம் தொடங்குகிறது. இயக்குநராக பி.வாசுவையும், இணை தயாரிப்பாளராக மலையாள ஒரிஜினல் படமான `கத பறையும்போழ்' தயாரிப்பாளர் செவன் ஆர்ட்ஸையும், தெலுங்கு தயாரிப்பாளர் அஸ்வின் தத்தையும் பட லாபத்தின் பங்காளிகளாக ரஜினி ஒருங்கிணைக்கிறார்.

படத்தை ரஜினியின் வழக்கமான மசாலா படமாக எடுப்பதா, பசுபதியைச் சுற்றி வரும் ஒரு நல்ல கதையில் ரஜினி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதா என்ற குழப்பத்தில் குசேலனின் வணிகம் சீரழிக்கப்பட்டது. படத்தின் பூஜையின்போது இந்தப் படத்தில் நான் 25 சதவிகிதம்தான் என்று சொன்னார் ரஜினி.

அதன்படி படம் எடுக்கப்பட்டிருந்தால் படத்தின் செலவு அதிகபட்சம் 10 கோடிக்குள் முடிந்திருக்கும். 35 கோடி ரூபாய் வரை படத்தை விற்றிருக்க முடியும். லாபம் 25 கோடி ரூபாயில் ரஜினி, கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ், அஸ்வின் தத், பி.வாசு ஐவருக்கும் ஆளுக்கு 5 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். ரஜினி பங்கேற்ற ஒரு நல்ல கதையுடனான குடும்பப் படம் வெற்றியடைந்தது என்ற புகழ் கூட படத்துக்குக் கிடைத்திருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன? படத்தின் இசை வெளியீட்டின் போது பசுபதி முன்னிறுத்தப்படவில்லை. 25 சதவிகிதம்தான் ரஜினி என்பது மறுபடியும் பேசப்படவில்லை. இது முழுக்கவும் ரஜினி படம் என்ற தொனி முன்னிறுத்தப்பட்டது. தயாரிப்புச் செலவும் 20 கோடி வரை போய்விட்டது எனப்படுகிறது.

படத்தை வாங்கப் பல்வேறு கார்ப்பரேட் கம்பெனிகளிடையே போட்டி ஏற்பட்டது. 55 கோடி விலையில் தொடங்கிய பேரம் போட்டியால் 63 கோடியில் போய் நின்றது. பிரமிட் சாய்மீரா படத்தை வாங்கியது.

படத்தின் தயாரிப்புச் செலவும் அதற்கேற்ப விற்பனைத்தொகையும் அதிகரித்தபோதும், யாருக்கு எவ்வளவு கிடைத்தது? ரஜினிக்கு சுமார் 20கோடி! மீதி நான்கு பயனாளிகளுக்கும் சேர்த்து மொத்தமே ஏறத்தாழ அதே தொகை!!  எல்லாம் சரியாகவே இருந்திருக்கும் - தியேட்டரில் வசூலும் இருந்திருந்தால்! இது ரஜினியின் வழக்கமான மசாலா படம் இல்லை என்பதால் முண்டியடித்து மூன்று முறை பார்க்கும் ரசிகர்கள் வரவில்லை.

படத்தை வாங்கி சரி பாதி இடங்களில் விநியோகித்த பிரமிட் சாய்மீராவுக்கும், மீதி இடங்களில் விநியோகித்தவர்களுக்கும் பெருந்தொகைகளை முன்பணமாகக் கட்டித் திரையிட்ட கொட்டகைக்காரர்களுக்கும் மொத்தமாக சுமார் 30 கோடிக்கு மேல் நஷ்டம்!  

பொதுவாக ஒரு கொட்டகைக்காரர் படத்தை 10 லட்சத்துக்கு வாங்கினால் அவர் 2 லட்சம் லாபத்துக்கும் தயார்; 2 லட்சம் நஷ்டத்துக்கும் தயார் என்பதுதான் வழக்கமான நிலை. குசேலனில் நஷ்டம் 20 சதவிகிதமாக இருந்திருந்தால் முணுமுணுப்போடு போயிருக்கும். 

ஆனால் குசேலனில் பத்து லட்சம் போட்டால் ஆறு லட்சம் கூட திரும்பாது என்ற நிலை. அதனால்தான் பல விநியோகஸ்தர்களும் சினிமாக் கொட்டகைக்காரர்களும் கொதித்து எழுந்து ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்டார்கள். ஏனென்றால், படத்தால் பெரும் பொருளாதார லாபம் அடைந்த ஒரே ஒருவர் அவர்தான். 

கமல்ஹாசன் தசாவதாரத்திற்கு சுமார் 20 மாதங்கள் வேலை செய்து   10 முறை ஒவ்வொரு சீனுக்கும்  ரப்பர் மேக்கப் மாற்றி மாற்றி உழைத்து சம்பாதித்ததை, ரஜினி குசேலனில் 20 நாட்கள் வேலை பார்த்து பத்து விக் மட்டும் மாற்றியே அனாயாசமாக சம்பாதித்துவிட்டார்.

இந்த சுனாமி தாக்குதலில் சிக்கித் தவிக்கும் விநி-சினிகள் கூக்குரல் எழுப்பியபின் நிவாரணமாக ரஜினி தன்னுடைய 20 கோடி ரூபாயிலிருந்து ஒரு பத்து சதவிகிதத்தைத் தர முன்வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதர நான்கு பயனாளிகளையும் தங்கள் வரவில் ஆளுக்கு பத்து சதவிகிதம் தரவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நஷ்ட ஈடு தங்கள் இழப்புக்கு கடைவாய்ப் பல்லுக்குக் கூட காணாது என்பதுதான் விநி-சினி கூட்டமைப்பின் கருத்து. எங்கள் இழப்பு 70 சதவிகிதம். அதில் பாதியையாவது ரஜினி சந்திக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.

பேச்சுவார்த்தை தொடருகிறது. ஏதோ ஒரு புள்ளியில் சமரசம் ஏற்படும். ஏனென்றால் ரஜினி `குசேலன்' பட ப்ராஜெக்டை தொடங்கியதே இன்னொருவருக்கு உதவும் ஒரு நல்ல நோக்கத்தில்தான். வழியில் எங்கேயோ எல்லாம் அவருடைய கமர்ஷியல் குழப்பத்தில் திசை மாறிப் போய் விட்டது.   

ஆனால், தமிழ் சினிமா உலகம் குசேலனிலிருந்து பாடங்கள் கற்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னொரு முறை இதே போன்ற அபத்தம் நிகழும்.  ஒரே தப்பு வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்தால் அது டிராஜெடி.

முதல் பாடம் : ரஜினி, வாசு வகையறாக்கள் கற்கவேண்டியது. ஒரு நல்ல கதையை நேராக, ஒழுங்காகச் சொன்னால் ரசிகர்கள் ஆதரிப்பார்கள். ஸ்டார் இமேஜுக்காக கதையை சிதைத்தால், கதை மட்டும் அல்ல, ஸ்டார் இமேஜும் காலியாகிவிடும்; வசூலும் காலியாகிவிடும்.

இரண்டாவது பாடம்: பிரமிட் சாய்மீரா, ரிலையன்ஸ், ஐங்கரன்  முதலிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒரு படத்துக்கு தகுதியான விலை என்ன என்பதை படத்தைப் பார்த்துக் கணித்தபிறகே நிர்ணயிப்பதில் பிடிவாதமாக இருக்க வேண்டும். போட்டியில் வியாபாரம் செய்வதையும் ஸ்பெகுலேஷனையும் தவிர்க்க  வேண்டும். சினிமா உலகத்தின் பல கோளாறான நடைமுறைகளை மெல்ல மெல்ல மாற்றி வருவதில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் தமக்குள்  வணிகம் சார்ந்த சில பொது ஒழுங்குகளை முதலில் பேசி முடிவு செய்வது உட்பட பல கடுமையான என்றாலும் தொழிலுக்குத் தேவையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய முடியும்.

மூன்றாவது பாடம்: சினிமா கொட்டகை உரிமையாளர்கள், தங்கள் கொட்டகையை வாடகைக்கு விடுவதற்கு அப்பால் போய் சூதாட்டம் போலசினிமா விநியோகத்தில் இறங்கினால் சிக்கல்தான் வரும். ஒரு படத்துக்கு வசூலில் என்ன விகிதாசாரம் பேசலாம், என்ன வாடகை நிர்ணயிக்கலாம் என்பதில் தெளிவும், அரங்கத்தை ரசிகர்களுக்கு வசதியானதாகவும் ஈர்ப்புடனும் வைத்திருக்கும் நடவடிக்கைகளில் அதிக கவனமும் தேவைப்படுகிறது. கொட்டகைக்குள் அளவுக்கு மேல் இரு மடங்கு ஆட்களை திணிப்பதிலும் ஸ்டார்களின் ரசிகர்களிடம் மூன்று மடங்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பதிலும் காட்டும் ஆர்வம் இருபக்க கத்தி மாதிரி. எந்தப் பக்கமும் வெட்டும் என்பதைத்தான் `குசேலன்' காட்டியிருக்கிறது.

நான்காவது பாடம்: சினிமா துறையில் இருக்கும் எல்லாருக்குமானது. படம் ரிலீஸான பின்னால், நஷ்டம், நஷ்ட ஈடு என்ற கோரிக்கைகளை எழுப்புவது ஆரோக்கியமானதே அல்ல. ரஜினி `பாபா' படத்தில் நஷ்ட ஈடு கொடுப்பதாகத் தொடங்கிய முன்னுதாரணம் வணிக ரீதியாக சரியான முன்னுதாரணம் அல்ல.

ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்னால் அதில் பணம் போடும் எல்லாரும் அதைப் பார்த்து தாங்கள் போடும் பணத்துக்குத் தகுதியான சரக்குதானா என்ற முடிவை எடுக்காமல் படத்தை வெளியிடக்கூடாது.

ஐந்தாவது பாடம்:  படத்தின் பெயரில் தமிழ் இருந்தால் கேளிக்கை வரி அடியோடு ரத்து என்ற அபத்தமான சலுகையைக் கொடுத்திருக்கும் அரசாங்கம், டிக்கெட் விலையை இஷ்டப்படி வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, கொட்டகையாளர்களைக் கெடுத்து வைத்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் ஒரு படத்தின் விலை உயர்கிறது. நடிகனின் சம்பளம் உயர்கிறது. படத்தின் பட்ஜெட் உயர்கிறது. நல்ல கதைகளுடன் படம் வரும் வாய்ப்பு குறைகிறது. ரசிகர்களிடம் வசூலிக்கும் கறுப்புப் பணம்தான் நடிகனின் கறுப்புப் பணமாக மாறுகிறது. டிக்கெட் விலை, அரங்குகளின் தரம் இரண்டிலும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்யத் தவறுவது தவறு.

ஆறாவது பாடம்: படம் பார்க்கும் நமக்கு.  வெறுமே படம் பார்த்தால் மட்டும் போதாது. படத்தைப் பற்றி மீடியா உதவியுடன் பூ சுற்றுவதற்கு சினிமாக்காரர்கள் வரும்போது நம் காதைக் காட்டாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஓட்டுப் போட்டால் போதாது. ஓட்டுக் கேட்பவர்களின் யோக்யதையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல படம் பார்த்தால் போதாது.   படம் எடுப்பவர்கள் நம்மிடம் நடத்தும் ஹைப்பர்போல் பாலிடிக்ஸையும் புரிந்து கொள்ள வேண்டும்..

இ.வா.பூச்செண்டு

மன்மோகன் -புஷ் கூட்டணியின் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கும் ஆறு உலக நாடுகளுக்கும் இ.வா.பூ.

இ.வா.வருத்தம்

விவசாயத்துக்கு புது அர்த்தம் கொடுத்த ஜப்பான் விவசாயி மசனோபு ஃபுகோக்கா தன் 95வது வயதில் மரணமடைந்தது இ.வா.வருத்தச் செய்தி. இயற்கையை எதிர்த்து சண்டையிடாமல் அதன் போக்குடன் நேசமாக மனிதன் வாழ்ந்தால்தான் பூமியிலேயே சொர்க்கத்தைக் காணலாம் என்பதை தன் வேளாண் முறையின் மூலம் நிரூபித்தவர் ஃபுகோக்கா. நிலத்தை உழக்கூடத் தேவையில்லை என்ற ஃபுகோக்காவின் கோட்பாடு பிரமிக்கவைப்பது. மேலும் அறிய விரும்புவோருக்காக, அவருடைய ஒற்றை வைக்கோல் புரட்சி நூல் தமிழிலும் கிடைக்கிறது.

இ.வா.குட்டு

இந்தியாவின் பெருமைகளில் ஒருவரான எம்.எஃப். உசேனின் ஓவியக் கண்காட்சியில் புகுந்து நாசவேலைகள் செய்திருக்கும் இந்துத்துவ தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம் சேனைக்கு இ.வா.குட்




Read more...

நச்சுன்னு 4 கேள்வி



கம்யூனிஸ்ட்தி.மு.க. கூட்டு

கேள்வி 1: காங்கிரசுடன் தி.மு.க உறவு நீடித்தால் நாங்கள் தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம் என்று தமிழகத்தில் இடதுசாரிகள் அறிவித்திருக்கிறார்களே?

தவறான அறிவிப்பு. காங்கிரசுடன் தி.மு.க உறவை முறித்துவிட்டால் மட்டும் ஆதரிப்பார்களா? மாநிலங்களவையில் கனிமொழியின் முதல் பேச்சே ஒப்பந்தத்தை ஓஹோ என்று ஆதரித்துப் பேசியதுதானே? அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்வதில் காங்கிரஸ் தீவிரம் காட்டியதை எதிர்த்து ஆதரவைத் திரும்பப் பெற்ற இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தையும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ விடாமல் காப்பாற்றிய கட்சிகளில் தி.மு.க.வும் ஒன்றல்லவா? எனவே அணு ஒப்பந்தத்தை ஆதரித்த, காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்த எந்தக் கட்சியுடனும் இடதுசாரிகள் சேரமாட்டோம் என்று அறிவிப்பதுதான் நேர்மை.

அதன்படி, தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலைச் சிறுத்தைகள் யாருடனும் இடதுசாரிகள் சேரமுடியாது.

பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்தவர்கள் அல்ல. தாங்கள் ஆட்சிக்கு வந்து அதை நிறைவேற்றவேண்டுமென்று விரும்புகிறவர்கள். எனவே அவர்களுடன் சேரக் கூடாது.

முதல்முறையாக இடதுசாரிகள் தமிழகமெங்கும் 40 எம்.பி தொகுதிகளிலும் 234 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, நிஜமான மூன்றாவது அணியாகத் தங்களை அடுத்த 20 வருடங்களில் வளர்த்துக் கொள்ளவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்காக முழுமூச்சாகப் போராடவும் நல்ல வாய்ப்பு இப்போதுதான் வந்திருக்கிறது. நிச்சயம் இதை அவர்கள் தவற....விடுவார்கள்!

மதவாத எதிர்ப்பு

கேள்வி 2: மதவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வராமல் தடுக்க, மறுபடியும் பாபர் மசூதி இடிப்பு ஏற்படாமல் தடுக்க, தொடர்ந்து தங்கள் அணியில் இருக்கும்படி கம்யூனிஸ்ட்டுகளை கலைஞர் வேண்டிக் கொண்டிருக்கிறாரே?


மதவாத எதிர்ப்பு பற்றிப் பேசும் அருகதையற்றவர் கலைஞர் கருணாநிதி. பாபர் மசூதியை அத்வானி தலைமையில் ஒரு மத வெறிக் கூட்டம் போய் இடித்த சம்பவம் நடந்த பிறகுதான், பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டு வைத்துக் கொண்டது. குஜராத்தில் மோடி அரசின் ஆதரவுடன் நடந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் பற்றி மழுப்பலாகக் கருத்து தெரிவித்தவர் கருணாநிதி.

கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களான வேதாந்தத்தையும் ஆர்.பி.வி.எஸ்.மணியனையும் அரசின் கிராமப் பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களாகத் தொடர்ந்து நியமித்து வருவதும் கருணாநிதிதான். அதே ஆர்.பி.வி.எஸ்.மணியன் அண்மையில் குடந்தை ராமர் கோயிலில் `ஆன்மிக' சொற்பொழிவில், தசரதனைப் போல வயதானதும் ஓய்வெடுக்காமல் இருக்கும் அரசியல்வாதி என்று மறைமுகமாக கலைஞரைத் தாக்கிப் பேசினாலும், சுரணையில்லாமல் இருப்பவர் கருணாநிதி.

நான் சொன்னால் ஒரு லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால், `என் மனசாட்சியே ஞாநிதான்' என்று அறிவித்துவிடக் கூடியவர் அவர். மதவாத எதிர்ப்புப் பேச்சுகள், பகுத்தறிவுப்பேச்சுகள், `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்` என்பது போன்ற வழவழா பக்திப் பேச்சுகள், எல்லாமே அவருடைய சுயநல அரசியலின் முகமூடிகள்.


டி.எம்.எஸ். பாராட்டு விழா

கேள்வி3:டி.எம்.எஸ்.சுக்கு நடத்திய பாராட்டு விழா பாராட்டுக்குரியதுதானே?


டி.எம்.எஸ்.சுக்கு எங்கே பாராட்டு விழா நடந்தது? கருணாநிதியின் மகன் அழகிரியின் வலிமையைக் காட்டுவதற்காகவும், மதுரையில் கணிசமாக இருக்கும் டி.எம்.எஸ் பிறந்த ஜாதியினரின் ஓட்டுகளை அழகிரிக்கு சார்பாக இழுக்கவும் நடத்தப்பட்ட விழாதானே அது. தி.மு.க.வினரால் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் போராளி லீலாவதியும் டி.எம்.எஸ். ஜாதியில் பிறந்தவர்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு நிகரான கோஷ்டித் தகராறுகள் நிறைந்த கட்சி இன்று தி.மு.கழகம்தான். ஒரே வித்தியாசம் தி.மு.கவின் எல்லா கோஷ்டிகளும் ஒரே குடும்பத்துக்குள்ளேயே இருக்கின்றன. அந்த வாய்ப்பைக் கூட அவர்கள் கட்சியில் மற்றவர்களுக்குத் தருவதில்லை.

குடும்பத்துக்குள் இருக்கும் கோஷ்டிகள் எல்லாவற்றையும் சமாதானப்படுத்துவதுதான் கலைஞர் கருணாநிதியின் ஹோம் ஒர்க்காக இருக்கிறது. ஸ்டாலினுக்காக ஒரு இளைஞர் மாநாடு; கனிமொழிக்காக ஒரு மகளிர் மாநாடு நடத்தினால், அழகிரிக்காக ஒன்றை ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதிலே அழகிரி தன் மகள் கயல்விழியை முன்னிறுத்தினால், அடுத்து குடும்பத்தில் வெடிக்கக்கூடிய கோபங்களைச் சமாளிக்க, நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கனிமொழி மகன் ஆதித்தன் தலைமையில் குழந்தைகள் மாநாடு நடத்தினாலும் வியப்படைய வேண்டாம்.

`நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்' என்று வாடிக்கையாகப் பேசுவது போல `நானும் இன்னும் ஒரு குழந்தைதான்' என்று இலக்கிய நயத்துடன் ஒரு சொற்பொழிவையும் எதிர்பார்க்கலாம்.

டி.எம்.எஸ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சிவாஜி கணேசன் போன்ற திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜய்காந்த் என்று எல்லா கட்சித்தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி அவர்களைப் பாராட்டினால் மட்டுமே அது சரியான பாராட்டு.

ஒலிம்பிக் வெற்றி

கேள்வி 4: ஒலிம்பிக் வெற்றிக்காக ஒரு இந்தியனாக காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்களா?


இல்லை. இந்த வெற்றி இந்தியாவுடைய வெற்றி இல்லை. இந்திய சமூகத்துடைய வெற்றியும் இல்லை.

இது அபிநவ் பிந்த்ரா என்ற தனியொரு பணக்கார இளைஞனின் வெற்றி. ஏழு வயதில் தன் வீட்டு வேலைக்காரி தலையில் பாட்டிலை வைத்து ஏர் கன்னால் சுட்டு வீழ்த்திய பணக்காரச் சிறுவன்தான் அபிநவ். தன் அம்மா தலையிலோ, அப்பா தலையிலோ, தங்கை தலையிலோ பாட்டிலை வைத்து சுட்டுப் பழகவில்லை.

துப்பாக்கி சுடுதல் பணக்காரர்களின் பொழுதுபோக்கு. அபிநவ் பயன்படுத்தும் துப்பாக்கியின் விலை சுமார் 30 ஆயிரம் ரூபாய்கள். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மிக நவீனமான துப்பாக்கிகளுடன் அபிநவ் பயிற்சி செய்வதற்காக சொந்தத்தில் வைத்திருக்கும் பயிற்சிக்கூடம் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டது. அபிநவ்வின் அப்பா முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கென்றே உற்பத்தி செய்யும் உணவுத் தொழிற்சாலை நடத்துகிறார். `அபிநவ் இன்' என்ற பெயரில் 200 கோடி ரூபாய் ஓட்டலை டேராடூனில் கட்டி வருகிறார். அதை மகனுக்கு ஒலிம்பிக் சாதனைக்கான பரிசாக தரப் போகிறார்.

அரசு அளித்த பயிற்சியாளரும் பயிற்சியும் சுமார் என்று ஒதுக்கிவிட்டு தன் சொந்த செலவில் பயிற்சியெடுத்துக் கொண்டவர் அபிநவ். எத்தனை ஏழை, நடுத்தர வகுப்பு இந்திய இளைஞர்களுக்கு இது சாத்தியம் ?

இவை பற்றியெல்லாம் இந்திய சமூகத்துக்கு பெருமைப்பட என்ன இருக்கிறது? துப்பாக்கி சுடுவது முதலில் ஒரு விளையாட்டா என்பதே யோசிக்கப்பட வேண்டும்.

அபிநவ் என்ற தனி மனிதனின் உறுதி, உழைப்பு, முதுகெலும்பில் காயம் பட்டபோதும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்தது போன்ற அம்சங்கள் மட்டுமே பாராட்டுக்கும் பின்பற்றுதலுக்கும் உரியவை. பி.டி.உஷா போன்ற கிராமத்து சாமான்ய மனிதர்கள் ஊக்குவிக்கப்பட்டு சாதனையாளர்களாக மாறும்போதுதான் இந்தியா பெருமைப்படலாம்..

குழந்தை யாருக்கு - வாசகர் கருத்து

குஜராத் கலவரத்தின் போது காணாமல் போய் இப்போது கிடைத்திருக்கும் குழந்தை யாருக்குச் சொந்தம்? ஆறு வருடமாக அதை வளர்த்த தாய்க்கா? ஆறு வருடமாக அதைத் தேடி வந்த, பெற்ற தாய்க்கா? உங்கள் கருத்துகளைக் கேட்டிருந்தேன்.

கருத்துகள் வந்து குவிந்திருக்கின்றன. பெற்ற தாயிடம் ஒப்படைக்கவேண்டுமென்று சொல்பவர்களும், வளர்ப்புத் தாயிடமே இருக்கவேண்டுமென்று சொல்பவர்களும் சம எண்ணிக்கையில் இருக்கிறார்கள்! இரு தரப்பினரும் தெரிவித்திருக்கும் காரணங்களில் பல நியாயமானவைதான். அதே சமயம், பெற்ற தாய் இஸ்லாமியராகவும் வளர்த்த தாய் ஹிந்துவாகவும் இருப்பதால், பலர் மதம் சார்ந்த அணுகுமுறையிலிருந்தே கருத்து தெரிவிக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில வாசகர்கள் மட்டுமே மாறுபட்ட தீர்வை முன்வைத்திருக்கிறார்கள். நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, சிறுவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாமல், இரு தரப்பும் தமக்குள்ளேயே ஒரு தீர்வைக் கண்டறிய முயற்சிக்கவேண்டும் என்பதே அது. இரு குடும்பங்களும் அருகருகே குடியமர்ந்து ஒன்றாக சிறுவனை வளர்க்கட்டும் என்பதே அந்தத் தீர்வு.

அப்போது அவன் எந்த மதத்தைப் பின்பற்றுவான் என்பதே சிக்கல். நம் எல்லார் மீதுமே மதம் கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. விவேக் முஸாஃபரும் அதற்கு விதிவிலக்கல்ல. எட்டு வயதுக்குள் அவன் மீது இரு மதங்கள் திணிக்கப்பட்டுவிட்டன. இரு குடும்பங்களும் தமக்குள் பேசி சுமுகமான தீர்வுக்கு வருவதையே நான் ஆதரிக்கிறேன். சட்டத்தால் தீர்க்கமுடியாத சிக்கல் இது. வளர்ப்புத்தாய் மீனாவுக்கு, கணவரையும் இழந்து வாழும் சூழலில், மகனையும் பிரிவது துயரமானது. ஷேக்ஸெபுன்னிசா இணையருக்கோ இழந்த மகனை ஆறாண்டுகள் தேடி, கிட்டிய பின்னரும் பிரியவேண்டுமென்பது பெரும் கொடுமை. இரு தரப்பும் அருகருகே குடியமர்ந்து மகனை வளர்க்கலாம்.

இப்போதைக்கு இரு மதங்களின் பழக்கங்களையும் அவனுக்கு அறிமுகம் செய்வதில் தவறில்லை. எந்த மதத்தைப் பின்பற்றுவது என்பதை சிறுவன் பெரியவனான பிறகு முடிவு செய்யட்டும் என்று விட்டுவிடலாம். நாளை அவன் ஒரு நாத்திகனாகக் கூட மலரலாம். பொருளாதார வசதிகளைத் திரட்ட முடியுமானால், சிறுவனை, இப்போதே தொலைதூரத்தில் ஒரு நல்ல உறைவிடப் பள்ளிக்கு அனுப்பிவிடலாம். விடுமுறைக் காலங்களில் மட்டும் அவன் இரு குடும்பத்தினரையும் சந்திக்கலாம். குஜராத் சூழலில், விவேக் முஸாஃபர், விவேக்காக வளர்கிறானா, முசாஃபராக வளர்கிறானா என்பதை விட ஒரு நல்ல மனிதனாக வளர்கிறானா என்பதே முக்கியமானது. இன்றைய சூழலில் அதற்கு உதவக் கூடியது, கடைசி தீர்வு என்பதே என் கருத்து.

இந்த வாரப் பூச்செண்டு

மத்திய அமைச்சர் அன்புமணிக்கு. ஓரின உறவை கிரிமினல் குற்றம் என்று சொல்லும் இந்திய சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதற்காக இ.வா.பூ.

இந்த வாரக் குட்டு

திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்த வாரக் குட்டு. வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் போடும் இந்தக் கோயில், அரசுக்கு கட்ட வேண்டிய வரிகளைக் கட்டாமல் ஏய்த்துக் கொண்டிருக்கிறது. திருப்பதி நகராட்சிக்கு 5 கோடி வரி பாக்கி. திருப்பதி நகர மேம்பாட்டு கழகத்துக்கு 5 கோடி வரி பாக்கி. ஆந்திர அரசுக்கு 19 கோடி வரி பாக்கி. பக்தர்கள் கோடி கோடியாகக் கொட்டினாலும் அரசுக்கு வரி பாக்கி வைத்திருப்பதற்காக இ.வா.குட்டு.

இந்த வார ஓ போடு

சமூக ஆர்வலர் அ.கி.வேங்கட சுப்பிரமணியனின் புகாரையடுத்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, எல்லா மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். யாருக்கும் ஓட்டு போட விரும்பாத வாக்காளர்கள் அதை 49 ஓ பிரிவின் கீழ் வாக்குச் சாவடியில் தெரிவித்து பதிவு செய்வதற்கு உள்ள உரிமையை ஒரு அறிவிப்பாக எல்லா வாக்குச்சாவடிகளிலும் பிரதானமாகத் தெரியும் விதத்தில் அமைக்க வேண்டும் என்று இதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நரேஷ் குப்தாவுக்கு ஓ போடுவோம். (மத்தவங்களுக்கு 49 ஓ)

Read more...

ரஜினிக்கு ஒரு பகிரங்க கடிதம் - ஞாநி


அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.

அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.

முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.

அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.

ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.

உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?

`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.

பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?'

இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.

ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.

இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.

உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !

குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.

(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.

இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.

எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.

அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.

சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.

அதில் ஆச்சரியம் இல்லை.

மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை....

மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.

போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும்.

அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.

உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.

அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.

சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.

அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..

அன்புடன்
ஞாநி

(குழந்தை யாருக்குச் சொந்தம்... வாசகர் கருத்துக்கள் அடுத்த வாரம்.)

இந்த வாரப் பூச்செண்டு

ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.

இந்த வாரக் குட்டு

ரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.


இந்த வாரத் அதிர்ச்சி

தி.மு.க, கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் எதுவும் இல்லாதது.

Read more...

முஸாபர் என்கிற விவேக் என்கிற முஸாபர் என்கிற விவேக் ?


இரண்டரை வயதில் காணாமல் போன குழந்தை ஒன்று இப்போது கிடைத்துவிட்டது. இப்போது அது யாருக்குச் சொந்தம்? ஆறு வருடமாக அதை வளர்த்த தாய்க்கா? ஆறு வருடமாக அதைத் தேடி வந்த பெற்ற தாய்க்கா?

அகமதாபாத் நீதிமன்றம் முன்பு இந்த வாரம் தீர்ப்புக்கு வந்த இந்த வழக்கின் விவரங்கள், இதே வாரம் பெங்களூருவிலும் அகமதாபாதிலும் நடந்த பயங்கரவாத சம்பவங்களின் தொடர் வரலாற்றின் பின்னால் இருக்கக் கூடிய சர்வமத மதவெறியர்களைக் கூட வெட்கப்படச் செய்யும்.
குஜராத்தில் 2002-ல் அரசு ஆதரவுடன் நடைபெற்ற முஸ்லிம் படுகொலைகளின்போது காணாமல் போன இரண்டு வயதுக் குழந்தை முஸாஃபர், ஆறு வருடங்களுக்குப் பின் விவேக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறான்!

அகமதாபாதில் குல்பர்கா சொசைட்டி என்ற முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் பிப்ரவரி 28, 2002 அன்று ஒரு வெறிக் கும்பல் படுகொலைகள் செய்தபோது, தடுக்க ஒரு போலீஸும் இல்லை. மொத்தம் 38 கருகிய பிணங்கள். இன்னொரு 31 பேரைக் காணவில்லை. அதில் ஒருவன்தான் இரண்டரை வயதுக் குழந்தை முஸாஃபர்.

தன் மனைவி, குழந்தை, அம்மா, சகோதரி எல்லாரையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எஹ்சான் ஜாஃப்ரி வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி முகமது சலீம் ஷேக் அத்தனை பேரையும் அங்கே கொண்டு சேர்த்தார். கொலைவெறிக் கும்பலோ காங்கிரஸ் முன்னாள் எம்.பி. உட்பட 38 பேரைக் கொன்று எரித்தது.

காணாமல் போன குழந்தை இடிபாடுகளிடையே எங்கேயோ கிடந்தது. சில மணி நேரங்கள் கழித்து அதைக் கண்ட ஒரு போலீஸ்காரர் தன்னுடன் அழைத்துப் போனார். ஐந்து கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் சரஸ்பூர் பகுதியில் தன் உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

கலவரத்தில் குழந்தை முஸாஃபரின் அத்தையும் காணாமல் போனாள். பாட்டியும் வேறு உறவினர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள். தப்பி ஓடிய அப்பா ஷேக்கும், அம்மா ஸெபுன்னிஸாவும், அகதிகள் முகாமில் இருந்தார்கள். தொடர்ந்து குழந்தையைத் தேடி வந்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழுவும் காணாமல் போனவர்களைத் தேடுவதில் ஈடுபட்டிருந்தது.

சமூகப் பணியாளர் தீஸ்தா செதல்வாட்,குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, கொலைகாரர்கள் மீதான வழக்கு விசாரணைகள் முதலியவற்றை முடுக்கிவிடுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சுமார் ஒரு வருடம் முன்பு, சரஸ்பூரில் மீனா பாட்னி என்பவரிடம் முஸாஃபர் இருப்பதாக தீஸ்தாவுக்கு ஒரு துப்பு கிடைத்ததும் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். அதையடுத்து, டி.என்.ஏ. சோதனை. விவேக்தான் முஸாஃபர் என்பதை உறுதிப்படுத்தியது.

முகமது சலீம் ஷேக்கும் ஸெபுன்னிஸாவும் குழந்தையை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கொடுத்த மனுவை மாஜிஸ்டிரேட் விசாரித்தார். ஆறு வருடங்கள் முன்பு குழந்தையின் பெற்றோர் கிடைத்தால் குழந்தையைத் தந்துவிடுவதாக போலீஸ்காரரிடம் சொல்லியிருந்த மீனா, இப்போது விவேக்கிடம் ஏற்பட்டுவிட்ட பாசப் பிைணைப்பில் குழந்தை தனக்கே வேண்டும் என்றார். அவருடன் சேர்ந்து குழந்தையை வளர்த்த மீனாவின் கணவர் இரு வருடங்கள் முன்பு இறந்துவிட்டார்.

விசாரணை முடிந்து இந்த வாரம் வந்த மாஜிஸ்டிரேட்டின் தீர்ப்பு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர், குழந்தை விவேக் முஸாஃபரிடம் `உன் விருப்பம் என்ன?' என்று கேட்டார். தான் மீனா அம்மாவுடனே இருக்க விரும்புவதாக அவன் சொன்னான். அதை ஏற்று மாஜிஸ்டிரேட் ஸெபுன்னிஸாவின் மனுவை நிராகரித்துவிட்டார். முகமதுவும் ஸெபுன்னிஸாவும் மேல் கோர்ட்களுக்கு முறையிட இருக்கிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு இரு கதைகள் உடனே நினைவுக்கு வந்தன. ஒன்று, பைபிளில் சொல்லப்படும் சாலமன் அரசன் கதை. சிக்கலான வழக்குகளில் நீதி வழங்குவதில் கில்லாடியாக சித்திரிக்கப்படும் சாலமன் முன்னால், இரு பெண்கள் ஒரு குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். யார் உண்மையான அம்மா என்று தெரியாத நிலையில் சாலமன், இருவரும் குழந்தையை பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி குழந்தையை அறுக்கச் சொல்கிறான்.

உடனே பதறுகிற ஒரு பெண்தான் உண்மைப் பாசத்துடன் இருப்பதால் அவளே பெற்ற தாயாக இருக்க வேண்டும் என்று சாலமன் முடிவு செய்கிறான். அவளிடம் குழந்தையை ஒப்படைக்கிறான் என்று சொல்கிறது இந்தப் பழைய கதை.

இதை எடுத்துக் கொண்டு ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட் தலைகீழாகத் திருப்பி வேறு ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். `காகேசியன் சாக் சர்க்கிள்' எனப்படும் இந்த நாடகத்தை எங்கள் பரீக்ஷா குழுவில் தமிழ்ப் பாத்திரங்களுடன் நம் சூழலுக்கேற்ற நாடகமாக `வட் டம்' என்ற பெயரில் பல முறை நடத்தியிருக்கிறோம்.

வட்டத்தில், மன்னருக்கெதிராக கலகம் நடக்கிறது. தன் உயிரே பெரிது என்று அரசி தப்பி ஓடும் நிலையில், குழந்தையை விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். அதை அவளுடைய பணிப் பெண் எடுத்துச் சென்று தன் னுடன் வைத்து வளர்க்கிறாள். பல வருடங்களுக்குப் பின் மக்களாட்சி வந்தபின்னர், முன்னாள் அரசி தன் குழந்தையைக் கேட்டு வழக்கு தொடுக்கிறாள்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதி மக்களாட்சிக்கு முந்தைய காலத்தில் திருடராக இருந்தவர். ஒரு வட்டத்துக்குள் சிறுவனை நிறுத்தி இரு பெண்களையும் ஆளுக்கொரு பக்கம் கையைப் பிடித்து இழுக்கச் சொல்கிறார். `யார் முதலில் வட்டத்துக்கு வெளியே சிறுவனை தம் பக்கம் இழுத்துக் கொள்கிறாரோ, அவருக்கே குழந்தை சொந்தம்' என்கிறார் நீதிபதி.

பலமாக இழுத்தால் சிறுவனுக்கு வலிக்கும் என்று இழுக்கத் தயங்குகிறாள் ஒரு பெண். அது பெற்ற தாய் அல்ல. வளர்ப்புத் தாய். அவளுக்கே குழந்தை சொந்தம் என்று தீர்ப்பு தரப்படுகிறது.

பிரெக்ட் மார்க்சீய சிந்தனையாளர். நிலம் யாருக்குச் சொந்தம்? உடமை யாளருக்கா? உழுது பராமரித்து விளைவித்தவருக்கா? இந்தக் கேள்வியை நாடக தொடக்கத்தில் எழுப்பி, அதற்கு பதில் சொல்லும் விதமாகக் குழந்தைக் கதையை நாடகமாக விரித்துச் சொல்லி முடிக்கிறார்.

விவேக் முஸாஃபர் நிகழ்ச்சியை நிச்சயம் சாலமன் கதையுடன் ஒப்பிட முடியாது. அதில் சொந்தத் தாயிடமிருந்து குழந்தையை இன்னொருத்தி திருடிக் கொண்டாள். பிரெக்டின் கதை ஓரளவு பொருந்தி வரும். உயிர் பயத்தில் தப்பி ஓடிய சூழலில் குழந்தையை விட்டு விட்டுச் செல்லும் கட்டாயத்தில் முஸாஃபரின் அம்மாவும், கதை அரசியும் இருந்தார்கள்.

ஆனால் முடிவு? பிரெக்டின் நாடகத்தில் வட்டத்தின் நடுவில் இருக்கும் சிறுவனை வளர்ப்புத் தாய் பலமாகப் பிடித்து இழுக்கத் தயங்கியதும், நீதிபதி அவள் மனதைப் புரிந்து கொண்டு தீர்ப்பு வழங்கிவிடுவார். அப்போது சிறுவன் கேட்பான் - `என் கருத்து என்னன்னு கேக்கலியே?' நீதிபதி வருத்தம் தெரிவித்துவிட்டு, சிறுவனின் கருத்து என்ன என்று கேட்பார். அவன் வளர்ப்புத் தாயிடமே செல்வதாகச் சொல்லிவிடுவான்.

இப்போது அசல் நிகழ்ச்சியில் விவேக் முஸாஃபரும் அப்படித்தான் சொல்லியிருக்கிறான். நீதிபதி அதன் அடிப்படையில்தான் தீர்ப்பையே வழங்கியிருக்கிறார்.

இதையடுத்து, பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எட்டு வயது நிரம்பிய ஒரு சிறுவனால், தனக்கு எது சரி, எது தேவை என்பது பற்றி கருத்துச் சொல்ல முடியுமா? அதுவும் எந்தப் பெற்றோருடன் இருப்பது என்ற பெரிய வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி? மறுபக்கம் அவனைக் கேட்காமல் முடிவெடுப்பது என்றால் அது மட்டும் எப்படி நியாயமாகும்? இன்னும் பேச்சுகூட வராத குழந்தையாக இருந்தால் அதன் சார்பில் பிறர் முடிவு செய்யலாம். மூன்றாம் வகுப்பு படிக்கும் நிலையில் ஒரு சிறுவனின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தர மறுக்கலாமா?

தீஸ்தா இன்னொரு கோணத்திலிருந்தும் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இடிபாடுகளில் குழந்தையைக் கண்டதும் அந்த போலீஸ்காரர் அதை அகதிகள் முகாமிற்கு அனுப்பி அதிகாரிகளிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். தனக்கு வேண்டியவர்களிடம் சென்று குழந்தையைக் கொடுத்தது என்பதே குழந்தையைக் கடத்தியதற்குச் சமமான குற்றமாகும் என்கிறார் தீஸ்தா. சரிதான். அதற்காக அந்த போலீஸ்காரரைத் தண்டிக்கலாம்; குழந்தையைத் தண்டிக்கக்கூடாதல்லவா?

குழந்தைக்கு நினைவு தெரிந்த நாள் முதல் வளர்ப்புப் பெற்றோரை மட்டுமே தெரியும். இரண்டு வயது முடிந்த சில மாதங்களில் ஈன்ற பெற்றோரைப் பிரிந்துவிட்டது. அந்த நினைவுகள் இருக்கும் என்று கூட சொல்ல முடியாது. (பொதுவாக நான்கு வயதுக்கு முந்தைய நினைவுகள் நமக்கு இருப்பதில்லை என்று சில உளவியல் அறிஞர்களால் கருதப்படுகிறது.)

இந்த வழக்கில், ஸெபுன்னிஸா, மீனா இருவர் மீதும் நமக்கு நிச்சயம் பரிவு வேண்டும். அதை விட அதிகமாக விவேக் முஸாஃபர் மீது. இன்னும் சில மணி நேரங்கள் கவனிக்கப்படாமல் இருந்திருந்தால் செத்தே போயிருக்கக்கூடிய ஒரு குழந்தையை மதவெறிக் கலவர சூழலில், இன்னொரு மதத்தினரான தாய் எடுத்து வளர்த்தது நெகிழ்ச்சியான செய்திதான்.

இந்த வழக்கில் மதவாதிகள் உள்ளே நுழையும் ஆபத்தும் கடுமையாக இருக்கிறது. குழந்தை முஸ்லிமாகத் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டுமா, ஹிந்துவாக வளர்க்கப்படவேண்டுமா என்ற பார்வையிலிருந்தே அவர்கள் எந்தப் பிரச்னையும் வளர்த்துச் செல்வார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சிக்கலை ஸெபுன்னிஸா குடும்பமும் மீனா குடும்பமும் சுமுகமாகத் தீர்க்கத் தவறும் ஒவ்வொரு நிமிடமும், குழந்தையின் மன நிலை கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அடுத்தடுத்து நீதிமன்றப் படிகளில் இரு தரப்பும் ஏறி இறங்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு உண்டாகும் மன உளைச்சல் எப்படியாவது தவிர்க்கப்பட வேண்டும்.

வாசகர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் தீர்வு என்ன? தயவுசெய்து உடனே `ஓ பக்கங்கள், குமுதம், சென்னை_10' என்ற முகவரிக்கு எழுதுங்கள். முஸாஃபர் விவேக்காகவே இருக்கட்டுமா? விவேக் மறுபடியும் முஸாஃபர் ஆகவேண்டுமா? அடுத்த வாரம் உங்கள் கருத்துடன் என் கருத்தையும் பகிர்ந்துகொள்வேன்..

சென்ற வாரத் தொடர்ச்சி: அடுத்த தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும் சர்வகட்சி பிச்சை/கொள்ளைக்காரர்களிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி:
123தான் தெரியாது.. 49 ஓ என்றால் என்ன என்றாவது தெரியுமா?

இந்த வாரப் பூச்செண்டு

இந்தியாவிலேயே கல்வித்துறையில் அதிகமான லஞ்ச ஊழல்கள் தலைவிரித்தாடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்த்து `சாதனை' படைத்திருப்பதற்காக, அனைத்து கல்வி அமைச்சர்களுக்கும் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இ.வா.பூச்செண்டு. (ஒவ்வொரு பூச்செண்டுக்குள்ளேயும் இலவச இணைப்பாக ஒரு தேள் வைத்திருக்கிறது.)

இந்த வாரக் குட்டு

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்குத் தன்னுடைய தணிக்கை அறிக்கையை, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும், கொடுக்க மறுக்கும் சென்னை மாநகராட்சிக்கு இ.வா.குட்டு.

இந்த வாரத் தகவல்
நீதியே, தலைவணங்கு!

அலகாபாத் நீதிமன்ற ஊழியர் ராஜீவ் அஸ்தானா காசியாபாத் மாவட்ட நீதிமன்ற நிதியிலிருந்து 23 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுத்துக் கையாண்டதற்காகக் கைதாகியிருக்கிறார். இந்தப் பணத்தில் ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட, சுமார் 24 உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு வீட்டுக்குத் தேவையான சோபா, டவல்கள், மளிகைப் பொருட்கள், அவர்கள் பிள்ளைகளுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர், செல்போன்கள் முதலியவற்றை வாங்கிக் கொடுத்து வந்ததாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். எந்தெந்த நீதிபதிக்கு என்னென்ன பொருட்கள் என்று பெயரிட்டு பட்டியல் அளித்திருக்கிறார். இந்த நீதிபதிகளிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர். விசாரணைக் கேள்விகளை எழுதித் தன்னிடம் தருமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

கையாடல் செய்த பணம், நீதித்துறையின் நூற்றுக்கணக்கான கடைநிலை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடைக் கணக்கில் இருந்த பணமாகும்.

Read more...

ஓ பக்கங்கள் ( O pakkangal )

நச்சுன்னு 4 கேள்வி
ரஜினிக்கு ஒரு பகிரங்க கடிதம் - ஞாநி
முஸாபர் என்கிற விவேக் என்கிற முஸாபர் என்கிற விவேக் ?
வெட்கங்கெட்டவர்கள் - நாளைய அரசியல்
நாராயண மர்மம் - ஞாநி
பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்த்துங்கள் - ஞாநி
காடுவெட்டியும் கடலூரும் - ஞாநி
காப்பாற்றுங்கள் கலாம் - ஞாநி
அணுசக்தி ஒப்பந்தம் அவசியமில்லை - ஞாநியின்

Read more...

வெட்கங்கெட்டவர்கள் - நாளைய அரசியல்


இந்தக் கட்டுரை எழுதி அச்சாகும்போது நமது `மாண்புமிகு' மக்கள் பிரதிநிதிகள் வாக்களித்து முடிக்கவில்லை. `மதி கெட்ட மன்னன் மன்மோகனன்' ஆட்சி முடியுமா, தொடருமா என்பது தீர்மானிக்கப்படவில்லை. நீங்கள் படிக்கும்போது தீர்மானிக்கப்பட்டிருக்கும்.

ஆட்சி கவிழ்ந்திருந்தால் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில். தப்பித்திருந்தால், தேர்தல் இன்னும் பத்து மாதங்களில். ஆட்சி கவிழ்ந்திருந்தாலும் தப்பித்திருந்தாலும், சில விஷயங்கள் நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியவை. ஏனென்றால், அவைதான் தேர்தல் எப்போது வந்தாலும் நாளைய அரசியலுக்கு முக்கியமானவை.

நடைபெற்ற அரசியல் நாடகத்தில் நான்கு பிரிவினரின் நடவடிக்கைகள் நம் கவனத்துக்குரியவை.

முதல் பிரிவு அதிகாரிகள். எம்.கே.நாராயணன் போன்ற உயர்மட்ட உளவு, பாதுகாப்பு அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கிற விதம் மக்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. மக்களவையில் பேசுவதற்கு முன்னால், ராகுல் காந்தி கூட நாராயணனை சந்தித்து ஒப்பந்தம் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக செய்தி வெளியாயிற்று.

இந்திய அரசியலில் திரைமறைவு வேலைகளில் அமர்சிங் போன்ற அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பங்கு பற்றி விவாதிக்கப்படுகிற அளவுக்கு பல அதிகாரிகளின் பங்கு ஊடகங்களால் கூடப் பேசப்படுவதில்லை. பண பேரங்களில் தொழிலதிபர்களும், மிரட்டல் வேலைகளில் அதிகாரிகளும் திரைமறைவில் ஈடுபடுகிறார்கள் என்பது பத்திரிகை உலகினருக்கு எப்போதும் தெரிந்த விஷயம்தான். ஓய்வு பெற்றபின் சில அதிகாரிகள் தாங்களே கொஞ்சம் கொஞ்சம் (அரை) உண்மைகளை வெளியிடும்போது மட்டுமே அவர்களும் பல விஷயங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அணு ஒப்பந்தத்தை ஆதரித்து சில அணுசக்தித்துறை அதிகாரிகளும் எதிர்த்து அதே துறையின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு ஒப்புக் கொள்ளாத தகவல்களைக் கூட சிலர் இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இப்போது ஆதரித்தவர்களும் ஓய்வு பெற்ற பின்னர் புதிய உண்மைகளை எழுதக்கூடும்.

எனவே அரசியல் பேரங்களில், பின்னணி நடவடிக்கைகளில் அதிகாரிகளின் பங்கு பற்றி பொதுமக்கள் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல அதிகாரிகள் ஓய்வு பெற்றபின் பகிரங்கமாக கட்சிகளில் சேர்வதையும் பார்த்து வருகிறோம். இவர்களெல்லாம் பதவியில் இருந்தபோதும் அதே அரசியல் சார்புடன் கட்சி சார்புடன் என்னென்ன வேலைகள் செய்திருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டும்.

நம் ஆழ்ந்த கவனத்துக்குரிய இரண்டாவது பிரிவினர், நம் முன்னால் மாபெரும் ஒழுக்க சீலர்கள், நேர்மையாளர்கள், அறிஞர்கள் என்று தொடர்ந்து திட்டமிட்ட உத்திகள் மூலம் பிம்பங்களாக வடிவமைத்து நிறுத்தப்படும் அப்துல் கலாம், மன்மோகன் சிங் போன்ற முன்னாள் அதிகாரிகள்-இந்நாள் அரசியல்வாதிகள் ஆவர்.

அப்துல் கலாம் ஒரு நியூக்ளியர் சயன்ட்டிஸ்ட் அல்ல. அவர் பல்வேறு ராணுவம் சார்ந்த விஞ்ஞானத் தொழில் நுட்பத் துறைகளில் தன் பெரும் பகுதி அலுவல் வாழ்க்கையை நிர்வாகியாகக் கழித்தவர். தற்போதைய அணுசக்தி ஒப்பந்தம் பற்றி அவர் கருத்தைக் கேட்டு அமர்சிங் போன்ற அரசியல் வித்தகர்கள் மனம் மாறியதாக அறிவித்தார்கள். அவர் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார் என்ற தகவல் அவரை ஆதர்சமாகக் கருதும் பல இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் ஏன் ஆதரிக்கிறார் என்பதைப் பற்றி இதுவரை விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை. மாதம் ஒரு கல்லூரி, வாரம் ஒரு பள்ளிக்கூடம் என்று மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் ஆதர்சமாக தன்னை வடிவமைத்துக் கொண்ட கலாம், ஏன் ஒரு கல்லூரியிலோ, பள்ளிக்கூடத்திலோ சென்று இந்த அணு ஒப்பந்தத்தின் சிறப்புகள் பற்றி உரையாற்றியிருக்கக் கூடாது?

ஒப்பந்தத்துக்கு எதிராகவும், அணுசக்திக்கே எதிராகவும் பிரசாரம் செய்கிற எழுத்தாளர்கள்- பேராசிரியர்கள்- களப்பணியாளர்களான பிரஃபுல் பித்வாய், அச்சின்வனாய்க் போன்றவர்கள் எல்லாம் பாய்ண்ட் பாய்ண்ட்டாக ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. சமூக அக்கறை உடைய தனி நபர்கள்தான். அமர்சிங்குக்கு நேரம் ஒதுக்கிய கலாம், ஏன் ஒப்பந்தம் பற்றிய விமர்சனங்களுக்கு பாய்ண்ட் பை பாய்ண்ட் ஒரே ஒரு கட்டுரை கூட எழுத முன் வரவில்லை ? `அறிஞர்'களின் பேச்சை விட மௌனம் அதிக அர்த்தம் வாய்ந்தது போலும்.

மன்மோகனின் நேர்மை இந்த சந்தர்ப்பத்தில் மிக அதிகமாக பல வட்டாரங்களில் பேசப்பட்டது. அவர் அமெரிக்கர்களிடமிருந்து சூட்கேஸ் வாங்கிக் கொண்டு ஸ்விஸ் வங்கியில் ரகசியக் கணக்கு ஆரம்பிக்கக்கூடிய இயல்பினர் அல்ல என்று பலரும் நிச்சயம் நம்புகிறார்கள். அது நியாயமான நம்பிக்கையாகவே கூட இருக்கலாம். இன்றைய சூழலில் மகாத்மா காந்தியே தேர்தலில் நின்றாலும் அசல் செலவு ஒரு கணக்காகவும் தேர்தல் ஆணையத்துக்கு இன்னொரு கணக்கும் தரும் நிலைதான் இருக்கிறது; மன்மோகனும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்குகளைத் தனக்கு ஆதரவாகப் பெறுவதற்காக அதன் தலைவர் சிபு சோரனுக்கு மத்திய நிலக்கரி அமைச்சர் பதவியையும் அவர் மகனுக்கு மாநில துணை முதலமைச்சர் பதவியையும் பேரம் பேசுவதெல்லம் `நேர்மையாளர்' மன்மோகனுக்குத் தெரியாமல் ரகசியமாக நடப்பவையா என்ன? ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் புஷ்ஷுக்குத் தந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கும், இதற்கெல்லாம் உடந்தையாக இருப்பது என்பது எப்படிப்பட்ட நேர்மை? எனக்கு இது பெரும் அதிர்ச்சி அல்ல. பிரதமர் பதவி ஏற்கும்போதே தி.மு.க. ஆதரவுக்காக, இலாகா ஒதுக்கும் உரிமையையே விட்டுக் கொடுத்தவர் அவர்.

இங்கே நம் கவனத்துக்குரியது என்னவென்றால் `இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்ற சமாதானம் அல்ல. இன்றைய அரசியலில் லாலு பிரசாத் யாதவ், அமர்சிங், சுப்பிரமணியன் சுவாமி வகையறாக்கள் வேறு; மன்மோகன், சிதம்பரம், அப்துல் கலாம் வகையறாக்கள் வேறு என்று நம்மை நம்பவைக்க நடக்கும் பி.ஆர். உத்திகள், மூளைச் சலவைகள் எல்லாம் எவ்வளவு ஆபத்தானவை என்பது நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியது.

நடந்த அரசியல் நாடகத்தில் நம் அக்கறைக்குரிய மூன்றாவது பிரிவினர் சிபுசோரன், அமர்சிங், கலைஞர் கருணாநிதி வகையறாக்கள்.

அமர்சிங் அரசியலில் தரகர் பிரிவைச் சேர்ந்தவர். சிபுசோரன் `நான் விற்பனைக்குத் தயார்' என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிற ஒரு சரக்கு. கருணாநிதி சோரனையும் அமர்சிங்கையும் விட புத்திசாலித்தனமான ஒரு வியாபாரி. அவர் மட்டும் டெல்லிக்குச் சென்றிருந்தால் இந்த நெருக்கடியே ஏற்பட்டிருக்காது என்று அண்மையில் சான்றிதழ் கொடுத்தவர் இன்னொரு வெற்றிகரமான வியாபாரியான தயாநிதி மாறன். இன்றைய இந்திய, மாநில அரசியல்களில் இவர்களைப் போன்றவர்களே பெரும்பான்மையினர்.

என்ன பேரம் நடந்தது என்பதை வெளியே சொல்லாமல், `தேச நலனுக்காக' ஒப்பந்தத்தை ஆதரிக்கிறேன் என்று சொல்லும் அரசியல் புத்திசாலித்தனம் சிபு சோரன்களுக்கு இல்லை. அமர்சிங், கருணாநிதி, ராமதாஸ், ஜெயலலிதா போன்றோர் அந்த புத்திசாலித்தனத்தில் கரை கண்டவர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தினசரி ஓர் அரசியல் அறிக்கையும், ஒரு சினிமா விழாப் பேச்சும் வழங்கி வரும் கருணாநிதி, இதுவரை ஏன் தன் கட்சி அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறது என்று விரிவான ஓர் அறிக்கை வெளியிட்டதில்லை. பசுமைத் தாயகம் நடத்துகிற, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதாக காட்டிக் கொள்கிற, சிகரெட்-மதுவுக்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கிற மருத்துவர் ராமதாஸ் அணுசக்தி- கதிர்வீச்சு பற்றியெல்லாம் தன் கட்சியின் கருத்து என்ன என்று இதுவரை ஒரு அறிக்கை வெளியிடவில்லை. கொடநாட்டிலிருந்து கடைசி நொடியில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை கூட ஒப்பந்தம் ஆட்சி மாறும் வரை காத்திருக்கலாமே என்று மட்டுமே சொல்லிற்று.

அடுத்த 50 வருடங்களுக்கு இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக, கொத்தடிமையாக மாற்றக் கூடிய ஓர் ஒப்பந்தம் பற்றி இவர்களின் மௌனமும் மழுப்பலும் நம் கவலைக்கும் கவனத்துக்கும் உரியவை.

நான்காவது பிரிவு நம் மீடியாவும் கல்வித் துறையுமாகும். ஆங்கில தொலைக்காட்சி மீடியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு 20-
20 கிரிக்கெட் மேட்ச் போலவே ஆக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களையும் விவாதித்ததாக காட்டிக் கொண்டபோதும், அரசியல்வாதிகளின் குதிரை பேரங்களிலும், ஓட்டெடுப்பின் சஸ்பென்ஸ் த்ரில்லர் தன்மையிலும் மட்டுமே சேனல்கள் அதிக அழுத்தம் காட்டின. தமிழ் சேனல்களில் இவ்வளவு முக்கியப் பிரச்னை பற்றி தினசரி ஒரு அரை மணி நேர விவாதமாவது நடத்தப்பட்டிருக்க வேண்டும். மொத்தமாக கூட அரை மணி நேர விவாதம் நடக்கவில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகள் மட்டுமே பிரச்னையின் சகல அம்சங்களையும் எல்லா பார்வைகளிலுமிருந்து விரிவாகவும் ஆழமாகவும் கருத்துக் கூறும் கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றன. இணைய தளங்களில் ஓரளவு ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன.

நம் கல்வி நிலையங்களில் குறிப்பாக பல்கலைக்கழகங்களில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதங்கள், கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பெறும் பதவியாக துணைவேந்தர் பதவியே ஆக்கப்பட்டுவிட்ட சூழலில் பல்கலைக்கழகங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதே என் தப்புதான்.

நானறிந்த வரையில் சென்னை லயோலா கல்லூரியில் மட்டுமே இரு தரப்பு கருத்துக்களுடன் ஒரு விவாதம் (ஆங்கிலத்தில்) நடந்தது. மக்களவை வாக்கெடுப்புக்கு முன் தினம் நடந்த இந்த விவாத முடிவில் மாணவர்கள் ஓட்டளித்தார்கள். (ஒப்பந்தத்தை எதிர்த்து வாக்களித்தவர்கள் 73 சதவிகிதம்)

இப்படி நம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் எல்லாம் மேம்போக்கானவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும், பொறுப்பானவர்கள் போல நடிப்பதில் பாவனை செய்வதில் பெரும் திறமையாளர்களாகவும் இருப்பதைத்தான் நடந்து முடிந்த மக்களவை வாக்கெடுப்பு நாடகம் இன்னொரு முறை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதே சக்திகள்தான் தொடர்ந்து நம் நாளைய அரசியலையும் வழிநடத்தப் போகின்றன என்பதுதான் நமது மிகப் பெரிய கவலையாக இருக்க வேண்டும்.

இன்னும் மூன்று மாதமோ பத்து மாதமோ, வரப்போகும் தேர்தலில் நம் முன்னால் வந்து ஓட்டுப் பிச்சை கேட்கப் போகும் இந்த வெட்கங்கெட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் நாம் என்ன கேட்க வேண்டும் என்பது பற்றி........ அடுத்த வாரம்..

இந்த வாரப் பூச்செண்டு

இலங்கைப் படைகளால் தொடர்ந்து கடும் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மீனவர்கள் பக்கம், முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கவனத்தைத் திருப்பும் விதத்தில் ராமேஸ்வரத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டி ஓட்டு பயத்தை முதல்வருக்கு ஏற்படுத்தியதற்காக விஜயகாந்துக்கு இந்த வாரப் பூச்செண்டு.

இந்த வாரக் குட்டு

அதே கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு நிதானமிழந்து சுட்டுக் கொல்லுவோம் என்றெல்லாம் உளறியதற்காக விஜயகாந்துக்கே இ.வா.குட்டு.

இந்த வாரம் கவர்ந்தது

``பெட்ரோல் விலையேற்றம், ஆட்சி கவிழுமா கவிழாதா? என நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும்போது என் காதல் விஷயம் நாட்டுக்குத் தேவையான ஒன்றா? '' நடிகர் விஷால்.

Read more...

நாராயண மர்மம் - ஞாநி


ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா?

`மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது.

உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.

மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர்கள் யார் யார்? பிரதமரே நேரடியாகத் தெரிவிக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை அச்சாகும்வரை அவர் இதர அரசியல் கட்சித் தலைவர்களிடம் நேருக்கு நேர் பேசவில்லை; டி.வி. பேட்டிகளும் தரவில்லை. அடுத்தபடியாக மத்திய மின்சார அமைச்சர் பேசியிருக்கலாம். அவரும் இதுவரை பேசவில்லை. மின்சக்தித் துறை செயலாளர் போன்ற அதிகாரிகளும் பேசவில்லை.

ஒரே ஒரு அதிகாரிதான் தொடர்ந்து பத்திரிகை, டி.வி. சிறப்பு பேட்டிகளில் பேசிவருகிறார். ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த சமாஜ்வாதி கட்சியின் அமர்சிங்குக்கு, ஒரு மணி நேரத்துக்குள் இந்த ஒப்பந்தத்தின் சிறப்புகளைச் சொல்லிப் புரியவைத்து மனம் மாற்றியதும் அதே அதிகாரிதான்.

அவர் - பிரதமர் மன்மோகன் சிங்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மாயன்கோட்டை கேளத் சிவி.நாயர் நாராயணன் என்கிற எம்.கே. நாராயணன் !

ஏன் `பாதுகாப்பு' ஆலோசகர் மின்சாரத்துக்கான அணு ஒப்பந்தம் பற்றிய விளக்கங்களை அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தேச மக்களுக்கும் விளக்கிக் கொண்டிருக்கிறார்? ஏனென்றால், உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரம் பற்றியதே அல்ல என்பதுதான் காரணம். இன்னும் பல கோடி ரூபாய்களைக் கொட்டிக் குவித்தாலும் இப்போதைய 3 சதவிகிதத்திலிருந்து அணு மின் சாரத்தின் அளவை, கலாமின் கனவு வருடமான 2020-ல் 10 சதவிகிதம் வரை கூடக் கொண்டு செல்ல முடியாது என்பது தெளிவான விஷயம்.

எம்.கே நாராயணன் கடந்த வாரத்தில் பல்வேறு ஆங்கில டி.வி சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டிகளைப் பார்த்தேன். ஒரு பேட்டியின் இறுதியில் பேட்டியாளர் நிகழ்ச்சியை முடிக்கும்போது, பல தடைகளை மீறி இதைச் செய்து முடிப்பதில் நாராயணன் காட்டியிருக்கும் உறுதியையும் வெற்றியையும் பாராட்டினார். நாராயணனின் பதில்: ``இருக்கலாம். ஆனால் நான் வில்லனா, தேவதையா என்று தெரியவில்லை. போகப் போகத் தெரியலாம்.''

ஒப்பந்தத்துக்கு எதிரான தடைகளை அடித்து நொறுக்கி முன்னேற, மன்மோகனின் போர் தளபதியாகத் திகழும் 74 வயது நாராயணன் மின் துறை தொடர்பானவரும் அல்ல; அணுசக்தித் துறை விஞ்ஞானியும் அல்ல. வாழ்க்கை முழுக்க இந்திய உளவுத் துறையில் பணியாற்றியவர். ஐ.பி எனப்படும் இன்டெலிஜென்ஸ் பீரோவின் தலைவராக இருந்தவர்.

பேட்டியாளர் கேட்ட இன்னொரு கேள்வி: ``இவ்வளவு சிக்கலான ஒப்பந்தத்தை எப்படி அமர் சிங்குக்கு ஒரு மணி நேரத்துக்குள் புரியவைத்து சம்மதத்தைப் பெற்றீர்கள்?'' நாராயணன் பதில்: அது என்னுடைய அறிவுக் கூர்மையாக (பிரில்லியன்சாக) இருக்கலாம். அல்லது அற்புதமாக (மிராகிளாக) இருக்கலாம். ஆனால் அது அப்படித்தான் நடந்தது!

``பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களையும் இதே போல நீங்கள் சந்தித்து மனம் மாற்றியிருக்கலாமே'' என்று பேட்டியாளர் கேட்டார். ``அவர்கள் என்னை சந்திக்க முன்வரவில்லையே'' என்றார் நாராயணன் !

நிச்சயம் இப்போது மன்மோகன்சிங்குக்கு நாராயணன் ஒரு தேவதைதான். ஆனால், கடந்த காலத்தில் பலரும் அவரை ஒரு வில்லன் என்றே சொல்லியிருக்கிறார்கள். அணு ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவை திரும்பப் பெறும் பரபரப்பு நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில், காஷ்மீரில் காங்கிரஸ் அரசு அமர்நாத் நில விவகாரத்தால் ஆட்டம் கண்டது. முஃப்டி முகமது சயீது கட்சியின் ஆதரவை இழந்து நம்பிக்கை வாக்கை சந்திக்கும் நெருக்கடியில் இருந்தது.

அப்போது தன்னை நாராயணன் மிரட்டியதாக, காஷ்மீர் பேந்த்தர் கட்சித் தலைவர் டாக்டர் பீம்சிங் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். பேந்த்தர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழாமல் காப்பாற்றத் தவறினால், பீம்சிங்கின் பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என்றும், அவரால் காஷ்மீருக்கும் போக முடியாது; டெல்லியிலும் இருக்கமுடியாது என்றும் நாராயணன் மிரட்டினாராம்.

தான் மிரட்டவில்லை என்று மறுத்தார் நாராயணன். ஆனால் பீம்சிங்கிடம் பேசியது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். `காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தை ஆதரிக்க நீங்கள் விரும்புவதுதானே இயற்கையாக இருக்க முடியும்' என்று மட்டுமே பீம்சிங்கிடம் தான் சொன்னதாக நாராயணன் தெரிவித்தார் !

ஒரு மாநில அரசு கவிழும்போது அதைக் காப்பாற்ற இதர கட்சித் தலைவர்களிடம் பேசுவதும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பணிகளில் ஒன்று போலிருக்கிறது !

நாராயணன் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைகளில் அடிபட்டவர். நரசிம்மராவ் ஆட்சியின்போது உள்துறைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாதவ் காட்போல். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் பதவியிலிருந்து விலகிய அவர் எழுதிய நினைவுக் குறிப்புகளில், ஐ.பி. அதிகாரி நாராயணன் பற்றி பிரதமரிடம்தான் புகார் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். தன்னிடமோ உள்துறை அமைச்சரிடமோ தெரிவிக்காமல், உல்ஃபா தீவிரவாதிகளுடன் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தி பிரதமரையும் சந்திக்கவைத்தாராம். சந்திப்பு நடந்த பிறகுதான் தங்களுக்குத் தெரியும் என்கிறார் மாதவ். இதனால் ராணுவத்துக்கும் அரசுக்கும் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்கிறார்.

நாராயணன் பல சமயங்களில் ஓர் அரசு அதிகாரி போல பேசாமல், அரசியல் தலைவர் போலப் பேசிவிடுகிறார் என்பது அவர் மீது வைக்கப்படும் இன்னொரு விமர்சனம். பாகிஸ்தானில் பேநசீர் புட்டோ கொல்லப்படும் முன்னர், தேர்தலில் ஜெயித்து பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. பேநசீர் பிரதமரானால் இந்தியாவுடன் உறவு மேம்படும் என்று சொல்ல முடியாது என்று கருத்து தெரிவித்தார் நாராயணன்! சொன்ன வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்பமுடியாதவர் பேநசீர் என்றார் நாராயணன். ஒரு அதிகாரி இப்படியெல்லாம் கமெண்ட் அடிப்பது மரபுக்கு விரோதமானது.

அண்மையில் இலங்கைக்கு நாராயணனும் இந்திய உயர் அதிகாரிகளும் சென்று வந்தனர். அப்போது நாராயணன் தமிழர் தலைவர் சம்பந்தனிடம் காராசாரமாக வாக்குவாதம் செய்ததாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. `ராஜீவ் கொலைக்கு பரிகாரமாக, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பொட்டு அம்மனையாவது இந்தியாவிடம் ஒப்படைக்காமல், எப்படி இந்திய அரசு இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகச் செயல்படமுடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?' என்று அவர் சம்பந்தனைக் கேட்டாராம். இப்படிக் கடுமையாகப் பேசிவிட்டதால் அவரைச் சமாதானப்படுத்தும்படி பின்னர் இந்திய ஹைகமிஷனரிடம் சொன்னாராம்.

திரைமறைவில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றிய எதிரெதிர் தரப்புத் தகவல்களைப் பொதுவாக ஊர்ஜிதம் செய்வது கடினம். பீம்சிங், மாதவ் காட்போல், புலி ஆதரவு தளங்கள் சொல்பவை எல்லாம் உண்மையாக இருந்தால், நாராயணன் நாடாளுமன்றத்துக்கும் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சூப்பர் ப்ரைம் மினிஸ்டராக இருக்க வேண்டும். அவற்றில் பாதியளவு உண்மையிருந்தால்கூட, அது கவலைக்குரிய விஷயம்தான்.

நாராயணன் வில்லனா, தேவதையா, வேலு நாயக்கரா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு பாதுகாப்பு ஆலோசகர் இந்த அளவுக்கு அணுசக்தி ஒப்பந்த வேலைகளில் பங்கேற்கும்போது, ஒப்பந்தத்தின் அசல் நோக்கம் மின்சாரமாக மட்டும் இருக்க முடியாது என்றே கருதவேண்டியிருக்கிறது.

ஒப்பந்தப்படி இந்தியா இப்போது வைத்திருக்கும், இனி ஆரம்பிக்கப்போகும் அணு உலைகளில் எவையெல்லாம் ராணுவத் தேவைக்கானவை, எவை மின்சாரத்துக்கானவை என்பதை பிரித்துப் பட்டியலிடும். மின்சார உலைகளை மட்டும் சர்வதேச அணுசக்திக் கழகமான ஐ.ஏ.ஈ.ஏவின் கண்காணிப்புக்கு உட்படுத்தும். இப்படிச் செய்தால் அமெரிக்காவும் இதர நாடுகளும் இந்தியாவுக்கு யுரேனியத்தையும் அணு உலைகளையும் அள்ளி அள்ளி வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்.

இங்கேதான் என் முதல் சந்தேகம். நம்மிடம் உள்ள யுரேனியம் போதவில்லை என்பதே உண்மைதானா? மின்சார உலைகளுக்கு அமெரிக்கா, இதர நாடுகளிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டு, நம் வசம் உள்ள யுரேனியத்தை முழுக்கவும் அணு ஆயுத தயாரிப்புக்குத் திருப்பி விடுவதுதான் அசல் நோக்கமா?

ஒரு டி.வி. பேட்டியிலே நாராயணன் போகிற போக்கில் தெரிவித்த இன்னொரு தகவல் பெரும் கவலையை எழுப்புகிறது. ஒப்பந்தம் முடிந்து அணு உலைகளையும் யுரேனியத்தையும் இறக்குமதி செய்யும்போது, இந்தியாவின் அணுசக்தி சட்டத்தை திருத்த வேண்டி வரும் என்றார். எதற்காக? எல்லா உலைகளையும் அரசே நடத்த முடியாது. தனியார் வசமும் தரவேண்டியிருக்கும். அதற்கேற்ப சட்டத்தைத் திருத்தவேண்டியிருக்குமாம்.

அரசு வசம் இருக்கும்போதே, கதிர்வீச்சு அளவு , ஊழியர் பாதுகாப்பு, அணுக் கழிவுகள் நிலைமை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சரியான தகவல்களைப் பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் வசம் அணு உலைகளை ஒப்படைத்தால்........ அய்யோ, தோல் பதனிடுதலால் நாசமான ஆம்பூர், பாலாறு, சாயப்பட்டறைகளால் அழிந்த கொங்கு மண்டலம், 24 வருடமாகியும் வாயு விபத்துக்கு நஷ்ட ஈடு தரப்படாத போபால் எல்லாம் நினைவுக்கு வருகின்றன.

தனியார் தொழிலதிபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும், பதில் சொல்லவைப்பதும், கறாராக தண்டிப்பதும் மேற்கு நாடுகளில் சாத்தியமாகலாம். இந்தியாவில் இருக்கும் `எதிலும் ஊழல்; எங்கும் ஊழல்' என்ற அரசியல் நிர்வாகச் சூழலில், ஆபத்தான அணு உலைகளை தனியாரிடம் ஒப்படைப்பது பேரழிவுக்கு வழி வகுத்துவிடக் கூடும். இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியையும் தகவல் அறியும் உரிமை என்ற ஜனநாயக நீதியையும் இன்னமும் தனியார் துறைக்கு நம்மால் கொண்டு வர முடியவே இல்லை.

ஓம் நமோ நாராயணாய... இந்திய_அமெரிக்க அணு ஒப்பந்தம் என்னை அஸீனாக்கிவிடும் போலிருக்கிறதே!.


இந்த வாரக் குட்டு

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப் படுவதையும் சுட்டுக் கொல்லப் படுவதையும் தடுக்க எதுவும் செய்யா மல் அலட்சியமாக இருந்து வரும் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இ.வா.குட்டு.

இந்த வாரப் பூச்செண்டு

மகாராஷ்டிரத்தில் எந்த மீடியம் பள்ளியானாலும் மராத்தியை ஒரு மொழிப் பாடமாக எல்லா மாணவர்களுக்கும் கட்டாயமாகக் கற்றுத் தராவிட்டால் பள்ளியை மூடச் செய்வோம் என்று அறிவித்திருக்கும் ராஜ் தாக்கரேவுக்கு இ.வா. பூ.

இந்த வாரக் தகவல்

ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சீன அரசு அழைப்பு தரவில்லை. இந்தியாவிலிருந்து சோனியா காந்தியை மட்டுமே அழைத்திருக்கிறது.

Read more...

ஞாநி

Read more...

பெட்ரோல் விலை ரூ.100 ஆக உயர்த்துங்கள் - ஞாநி


ஏற்கெனவே பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதார மேதைகள் மன்மோகன்&சிதம்பரம் கூட்டணிக்கு மரண அடியாக வந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு.இதன் விளைவாகத் தேர்தல்களில் சோனியாவும்காங்கிரசும் தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தால், மன்மோகன் சிங் பழையபடி உலக வங்கி வேலைக்கும் சிதம்பரம் வக்கீல் வேலைக்கும் போய்விட முடியும். பாவம் சோனியா. பாவம் ராகுல். பாவம் காங்கிரஸ்.

இந்தத் தருணத்திலாவது மன்மோகனும் சிதம்பரமும் மக்களிடம் உண்மைகளைப் பேசிவிடலாம்.பிரகாஷ் காரத்தும் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் ராஜ்நாத்தும் அத்வானியும் பரதனும் ராஜாவும் டெல்லியில் ஆட்சியில் இருந்தாலும் கூட பெட்ரோல் விலையைக் குறைக்க முடியாது என்பதுதான் உண்மை. அதை விடக் கசப்பான உண்மை இன்னும் கொஞ்ச நாட்களில் மறுபடியும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்ற வேண்டி வரும் என்பதாகும்.

பெட்ரோல் விலையைத் தீர்மானிக்கும் முதல் விஷயம் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதாகும். அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேஷியா, இரான், இராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரேட், வெனிசூலா ஆகிய 13 நாடுகள் வசம்தான் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதம் இருக்கிறது. சந்தையில் பெட்ரோலியத்தின் விலை குறையாமல் இருக்க, இவை அவ்வப்போது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்துவிடுகின்றன.

நவம்பர் 2006-ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஐம்பது டாலருக்குக் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன.இப்போது 2008-ல் முதல் மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தி 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது.

விலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு என்றெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 28 ரூபாய் வரை வந்து விடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய்தான். மொத்தம் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.

பெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைவது சுத்திகரிப்பு செய்து விநியோகிக்கும் தொழிற்சாலைகள் மட்டும்தான். ரிலையன்ஸ் கம்பெனி சுத்திகரிப்புத் தொழிலில் மட்டும் 2005&06-ல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007&08-ல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்துக்கு வரி போட்டு வருடத்துக்கு 2000 கோடி ரூபாய் திரட்டலாம். ஆனால், ரிலையன்ஸ் மீது வரி போட எந்த அரசும் முன்வராது. இந்தியாவில் ரிலையன்ஸ் தவிர மீதி எல்லா சுத்திகரிப்பு ஆலைகளும் பொதுத் துறையுடையவை.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இங்கேயும் விலையை உயர்த்தாவிட்டால், இந்த சுத்திகரிப்பு விநியோக கம்பெனிகள் எல்லாம் பெரும் நஷ்டத்தை அடையும் என்பதுதான் அரசு சொல்லும் வாதம். சந்தை விலைக்கேற்ப விலைகளை உயர்த்தினால், பெட்ரோலை லிட்டர் 100 ரூபாய்க்கு விற்க வேண்டி வரும். மக்கள் கொதித்துவிட மாட்டார்களா? எனவே, லிட்டர் 100 ரூபாய் ஆக்கவும் முடியாது.

எனவே எக்சைஸ், கஸ்டம்ஸ் வரிகளில் கொஞ்சத்தை மத்திய அரசும், விற்பனை வரியில் கொஞ்சத்தை மாநில அரசுகளும் குறைத்து பொது மக்களுக்கு அதிக விலையேற்றம் வராமல் சமாளிப்பதை வழக்கமாக செய்கின்றன.சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு நஷ்டம் வராமல் தடுக்க அந்தத் தொகையை அரசு பல வடிவங்களில் ஈடு செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், எல்லாம் முழு முட்டாள்தனம்.

இப்போதைய விலை உயர்வுக்குப் பிறகும் அரசு நஷ்டமடையப்போகும் தொகை சுமார் இருபது ஆயிரம் கோடி ரூபாய்கள். எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்திய வரிப்பணம்தான் இது. கிராமப்புறங்களில் ஒருவருக்கு வருடம் முழுவதும் குறைந்தபட்ச வேலை வாய்ப்புத் தருவதற்காக அரசு உருவாக்கிய திட்டத்துக்காக ஒதுக்கும் தொகையே வருடத்துக்கு வெறும் 16 ஆயிரம் கோடிதான். அதை விட 4 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பெட்ரோலை சலுகை விலையில் கொடுப்பதற்கு அரசு செலவிடுகிறது.

ஏன் பெட்ரோலை சலுகை விலையில் எல்லா பொது மக்களுக்கும் தரவேண்டும் என்பதுதான் என் கேள்வி.

கார்,டூவீலர் முதலிய தனியார் சாதனங்களுக்கு எந்தச் சலுகையும் தரவேண்டியதில்லை. லிட்டர் விலையை 100 ரூபாயாக வைக்கலாம்.

பஸ், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்து சாதனங்களுக்கு மட்டுமே சலுகை விலை தேவை. ஏழைகளும் நடுத்தர வகுப்பினரும் அடிப்படைத் தேவையான சமையல் செய்வதற்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய், எரிவாயு-வுக்கு மட்டுமே சலுகை தரலாம்.

நகரத்தில் ஒரு பஸ்ஸுக்கு சாலையில் தேவைப்படும் இடத்தில் இரு கார்கள் ஓட முடியும். பத்து டூவீலர்கள் ஓட முடியும். ஆனால் ஒரு பஸ்ஸில் 100 பொது மக்கள் செல்கிறார்கள்.இரண்டு கார்களில் அதிகபட்சமாக பத்துப் பேர். பத்து டூவீலர்களில் அதிகபட்சம் இருபது பேர். பஸ் வசதியை அரசு அதிகரித்தால், பல பேர் டூவீலர்களை விட்டுவிட்டு அதற்கு வந்துவிடுவார்கள்.

பொதுவாகவே சாலைப் போக்குவரத்து என்பது தொடர்ந்து பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகும். பெட்ரோல், செலவை அதிகரிக்கிறது. கார் போன்ற தனியார் வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க நெரிசல் அதிகமாகி, கோடிக்கணக்கில் செலவு செய்து ஒவ்வொரு சந்திலும் மேம்பாலங்கள் கட்ட வேண்டி வருகிறது.

மாறாக,ரயில் போக்குவரத்து என்பது ஆரம்பத்தில் பெரும் செலவு பிடிப்பதாக இருந்தாலும், அன்றாட பராமரிப்புச் செலவு குறைவானது. மிக அதிகம் பேரை மிகக் குறைவான நேரத்தில் மிகக் குறைவான செலவில் போக்குவரத்து செய்யக்கூடியது ரயில்தான்.

ஆனால், சென்னை போன்ற நகரத்தை எடுத்துக் கொண்டால் கார், டூவீலர் நெரிசலை அதிகரித்துவிட்டு, மாதாமாதம் ஒரு புது மேம்பாலம் கட்டியாக வேண்டிய சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். திருவான்மியூரிலிருந்து பாரிமுனைக்குப் பறக்கும் ரயிலில் 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. அதே ரூட்டில் பஸ்ஸில் 75 நிமிடங்கள் ஆகிறது.

ஆனால் பறக்கும் ரயிலைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரவில்லை. காரணம், நமது திட்டமிடுதலில் இருந்த கோளாறுதான். பறக்கும் ரயில் செல்லும் ரயில் நிலையங்களில் இறங்கி அடுத்த இடத்துக்குச் செல்ல ரயிலடியில் பஸ் நிறுத்தங்கள் கிடையாது. பல இடங்களில் ரயில் நிலையம் சந்துகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், மும்பையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் செல்லும் மேற்கு புறநகர் ரயில் பாதை நெடுக ஒவ்வொரு ரயிலடியிலும் இரு புறமும் பஸ் டெர்மினஸ்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்துப் பிரிவுகளான ரயிலும் பஸ்ஸும் மும்பையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இயங்குவதால், அங்கே சென்னையை விட டூவீலர்களின் விகிதம் மிகக் குறைவு. ஆட்டோக்கள் சி.என்.ஜி. எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால்,சூழல் மாசுபடுவது குறைவு. கட்டணமும் சென்னையை விடக் குறைவு.

நகரங்களில் போக்குவரத்தை பஸ், ரயில், ஆட்டோ முதலிய பொது போக்குவரத்துக்களைக் கொண்டே திறம்படச் செய்ய முடியும். அப்படிச் செய்தால், தனியார் கார்கள், டூவீலர்கள் எண்ணிக்கையையும் பெட்ரோல் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்.இந்த அணுகுமுறையைத்தான் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்றன.

பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் எத்தனால் கிடைப்பதில் எந்த சிரமமும் இல்லை. எத்தனால் தயாரிப்பதனால், உணவுப் பொருள் தட்டுப்பாடு வரும் சூழ்நிலையும் இங்கு இல்லை. ஏற்கெனவே இங்கே இருக்கும் சர்க்கரை ஆலைகளிலிருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்குப் போக எஞ்சிய எத்தனால் அளவே வருடத்துக்கு 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. ஆனால், இதில் கால் பாகத்தைத்தான் பெட்ரோலிய ஆலைகள் சென்ற வருடம் எடுத்துப் பயன்படுத்தின.

பெட்ரோல் உபயோகத்தைக் குறைப்பதுதான் பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான தீர்வு. அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள், போலீஸ், ராணுவம் முதலியோர் பொது மக்கள் செலவில் கார்களைப் பயன்படுத்தி வரும் விதம், சுருக்கமாகச் சொன்னால் அராஜகமானது. இந்தப் பயன்பாட்டை எளிதாக, சரிபாதியாகக் குறைக்க முடியும். அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் தினசரி அலுவலகத்துக்கு பஸ்ஸில் போகலாம்.எமர்ஜென்சி நிலைமைகளில் மட்டுமே காரைப் பயன்படுத்த வேண்டும்.தலைவர் படம் பார்க்கப் போனால் கூடவே அத்தனை எடுபிடிஅமைச்சர்களும் ஆளுக்கொரு காரில் கூடப் போகிறார்கள்.

பெட்ரோல் விலை இனியும் உயர்ந்துகொண்டுதான் போகும்.அதை சிக்கனமாக செலவழிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால், வீணே பொருளை அழிப்போம்.

சிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்.

1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.

7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.இதையெல்லாம் நிறைவேற்றும் எண்ணம் நம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாது. காரணம், இப்படிச் செய்தால் ஓட்டு கிடைக்காது என்று அவர்கள் பயப்படுவார்கள். இப்படிச் செய்யாவிட்டால்,ஓட்டுப் போடமாட்டோம் என்று பொது மக்கள் சொல்லும் நிலை வர வேண்டும்..


இந்த வாரப் பூச்செண்டு

டாஸ்மாக் மதுக்கடையை தங்கள் தெருவில் திறக்கக்கூடாது என்று பெரும் போராட்டம் நடத்திய சென்னை எல்லிஸ் சாலை குலாம் முர்த்தாசா தெருவாசிகளுக்கு இ.வா.பூ.

இந்த வாரப் சிரிப்பு

மக்களுக்கு சேவை செய்வதற்காக கட்சி தொடங்கி இருக்கிறேன்

- நடிகர் கார்த்திக்

இந்த வாரக் குட்டு

கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அவரைப் புகழ்வதற்காக உடலுறவுடன் அவர் படைப்புகள் தரும் இன்பத்தை ஒப்பிட்டுப் பேசியஜால்ரா பேரரசுகள் வாலிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இ.வா.குட்டு.

Read more...

காடுவெட்டியும் கடலூரும் - ஞாநி


காடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி ?

காடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.

குருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.

பா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்' இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.

குரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்தான்.

குடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.

வன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா? என்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

அரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.

இதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.

தி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல.... தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.

இதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.

கடலூர் சொல்லும் செய்திகள்..

வருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை நினைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.

இதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.

தமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.

தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று......... எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.

ஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.

என்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட.... மன்னிக்கவும் மயிலாட' நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.

கடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள். ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.

முதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன ?

செய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம்? அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ?

செய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன? கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா?

செய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.

செய்தி 4: மாநாட்டில் கலைஞர் செய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்' என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.
ஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த வாரப் பூச்செண்டு

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.

இந்த வாரக் குட்டு

எனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.

Read more...