எ கலப்பை 3.0 - புதிய வெளியீடு
நான் பிளாக்கில் எழுத ஆரம்பித்த போது எனக்கு தமிழில் எழுத கை கொடுத்தது எ கலப்பை எனப்படும் தமிழ் எழுதி தான். எ கலப்பை மென்பொருளை தமிழ்மணத்தில் இடப்பட்டுள்ள ஒரு சுட்டியின் மூலம் தேர்ந்தெடுத்து தரவிறக்கம் செய்வது வழக்கம்.
அதன்பின் பரவலாய் தமிழை கணிப்பொறியில் பயன்படுத்த ஆரம்பித்த போது பயன்படுத்தப் படும் ஒவ்வொரு கணிப்பொறியிலும் முதலாவதாய் எ கலப்பை மென்பொருளை உள்ளீடு செய்வது தான் எனது முதல் வேலையாயிருக்கும். எ கலப்பை மென்பொருளை க்ளிக் செய்தவுடன் அதில் முகுந்த் எனும் பெயரும் ஆழமாய் பதிந்துவிட்டது எனலாம். பின்னொரு நாளில் நண்பர் முரளியின் அறிமுகத்தின் மூலம் முகுந்த் அவர்கள் பெங்களூரிலே இருக்கிறார், அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. முகுந்த் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்.
எ கலப்பை மென்பொருளானது வின்டோஸ் விஸ்டா, கூகிள் குரோம் ஆகியவற்றில் பயன்படுத்த முடியாததாகி இருந்தது. வளரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தன்னை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எ கலப்பை இருந்தது. முகுந்த் அவர்கள் சேது, விஜய் குப்தா, அருணன், வெங்கடேஷ், குணசேகர் ஆகியோர்களின் பங்களிப்புடன் சேர்ந்து எ கலப்பை 3.0 வெளியிட்டிருக்கிறார்.
புதியதொரு பரிமாணத்தில் எ கலப்பை மென்பொருள் இணைய உலகில் நடைபோட்டு வருகிறது. ஏராளமான தரவிறக்கங்களைக் கொண்டு வருகிறது என முகுந்த் அவர்களின் மூலமும் கேள்வியுற்றேன். இப்புதிய வெளியீட்டில் தமிழ் 99, பொனடிக், டைப்ரைட்டர், பாமினி, இன்ஸ்கிரிப்ட் ஆகிய விசைப் பலகைகளை செயல்படுத்த முடியும்.
எ கலப்பை உள்ளீடு செய்வது எப்படி?
1. தமிழா.காம் இணையப் பக்கத்திற்கு செல்லவும்.
2. இணையப் பக்கத்தில் Projects சொடுக்கி, பின் e Kalappai சொடுக்கவும்,
3. தரவிறக்க சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
4. தரவிறக்கம் செய்யப்பட்ட ஃபோல்டரில் சென்று eKalappai-3.0-installer.exe யை செயல்படுத்தவும்.
5. காணப்படும் பெட்டியில் தேர்வு செய்து Install செய்யவும்.
6. உங்களுடைய Desktop ல் கீழ்க்கண்ட ஐகான் கிடைக்கலாம். ஐகானை செயல்படுத்தினால் விண்டோஸின் வலதுகீழ்ப் பக்கத்தில் உள்ள ட்ரேயில் எ கலப்பை ஐகான் கிடைக்கும்.
7. அதனில் சென்று மௌஸின் இடது பொத்தானை செலுத்தி Settings தெரிவு செய்து விருப்பப்பட்ட விசைப்பலகை வடிவங்களையும், அதனை தெரிவு செய்ய சுருக்கக் குறியீடுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
இப்புதிய எ கலப்பை வெளியீட்டினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரங்கள், கருத்துக்களுக்கும் mugunth@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களின் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அத்துடன் தமிழா.காம் தமிழ் தொடர்பான மென்பொருள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜாவா, டாட் நெட், பிஹெச்பி போன்றவற்றில் திறமை உள்ளவர்கள் தமிழா.காமின் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
சிங்கப்பூர் - ஒரு பார்வை ஒரு பயணம்
சிங்கப்பூர் வந்து ஒரு மாதமும் முடிந்து விட்டது. இங்குள்ள இடங்கள், வழிகள், மக்கள் என ஓரளவு பழக்கமாகிக் கொண்டு வருகிறது. உலக வரைபடத்தில் சிறு புள்ளியைப் போல் காணப்படும் சிங்கப்பூரில் வியத்தக்க மாற்றங்களைக் கொண்டு நாடு இயங்கிக் கொண்டு வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என ராமராஜன் ஒரு படத்தில் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்பார், எப்போதோ ஒரு முறை அந்த நாளில் சிங்கப்பூரை சினிமா படங்களில் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.
அன்றாட சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக எம்.ஆர்.டி யைச் சொல்லலாம். நாட்டின் அனைத்து பாகங்களும் சரியாக இணைக்கப்பட்டு எந்த மூலைக்கும் எளிதில் பயணம் செய்ய ஏதுவாகிறது. வடக்கு தெற்கு,வடக்கு கிழக்கு, மேற்கு கிழக்கு, வட்டப்பாதை என திசைகளுக்கு ஒன்றாக 3 (அ) 5 நிமிடங்களுக்கு ஒன்றாக குறுக்கும் நெடுக்குமாக ரயில் சென்று கொண்டே தான் இருக்கின்றன. இந்த ரயில்கள் சந்திக்கும் இடங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு திசைக்கு மாற்றிச் செல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. ஆகையினால் எங்கும் சிரமப்படாமல் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல எளிமையாக வழியமைக்கப்பட்டுள்ளது.
நான் தற்போது சிங்கப்பூரின் வடக்குப் பகுதியிலுள்ள மார்சிலிங்கில் தங்கியிருக்கிறேன். மார்சிலிங்கில் இருந்து நான் வேலை பார்க்கும் ராஃபில்ஸ் பிளேசஸுக்கு 40 நிமிட பயணம் நேரமாகும். ரயில் பயணங்கள் குளிரூட்டிகளாக உள்ளதால் இதமானதாக இருந்தாலும், அலுவலக நேரங்களில் சற்றே நெரிசலாக இருக்கும், ஆனால் ஒருவர் மற்றொருவரை உரசாத அளவுக்கு தூரம் உள்ள வகையில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணத்துக்கென ஈஸிலிங்க் (அ) நெட்ஸ் அட்டைகள் விற்கப்படுகின்றன. இந்த அட்டைகளின் மூலம் செல்போன்களுக்கு டாப்அப் பணம் ஏற்றி வைப்பது போல ஏற்றிக்கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலுள்ள இயந்திரத்தில் தேய்த்து விட்டு உள்ளே போனால் சேருமிடத்தின் வெளிவாசல் வரைக்குமான கட்டணத்தை தானாகவே அட்டைகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
இது மாதிரியான நுட்பத்தை பெங்களூர் மெட்ரோ ரயிலிலும் அறிமுகப் படுத்தப் போகிறார்கள் என ஏற்கனவே படித்ததை இங்கே பார்த்தவுடன் உணர முடிந்தது. எனக்குத் தெரிந்து ஷ்ரேயா, த்ரிஷா மினி ஸ்கர்ட்டில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். ஷுட்டிங் நடக்கையில் எப்படித்தான் அந்த ஆடையைப் போட்டி போட்டிக் கொண்டு நடிக்கிறார்களோ, சினிமா விழாக்களில் வரும் சிலர் எப்படித்தான் உட்காருகிறார்களோ என தேவையற்ற கவலையும் பட்டிருக்கிறேன், உங்களில் சிலரும் ஆதங்கப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே மினி ஸ்கர்ட்டில் வரும் பள்ளிப் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என சகலரும் மினி ஸ்கர்ட்டில் உலா வருவது சாதாரண்மாக உள்ளது. ஆனால் மினி ஸ்கர்ட் ரொம்ப அழகாய்த் தான் இருக்கிறது(!).
அவர்கள் எப்படி வந்தாலும் வம்பிலுப்பது, கலாய்ப்பது, தேவையற்ற சேட்டைகள் செய்வது என எந்தப் பிரச்சனையும் பெண்களுக்கு ஏற்படுவதில்லை, ஏனெனில் பெண்களைப் பாதுகாப்பதற்கென சட்டங்கள் கடுமையாக இருப்பதால் மக்களும் அதை உணர்ந்து ஒழுக்கமாக உள்ளனர் என்றே நினைக்கின்றேன். ரயிலில், ரயில் நிலையங்களில், அலுவலகங்களில், மின்தூக்கிகளில், சாலைகளில் என ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தப்பட்ட காமிராக்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. எம்.ஆர்.டி ரயில்களில் தண்ணீர் குடிக்கக் கூடாது, சாப்பிடகூடாது, புகை பிடிக்கக் கூடாது, ரயில் பாதை தண்டவாளங்களில் இறங்கக்கூடாது, ரயில் செல்லும் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள், பெரியவர்களுக்கு இடம் கொடுப்பது, வரிசையாய் செல்வது, வாசலில் நிற்காமல் உள்ளே செல்வது என ஒவ்வொன்றும் அறிவுப்புகள், தொலைக்காட்சியில், வானொலிகளில் அறிவுறுத்தப்படுகிறது (அ) விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீவிரவாதம் நுழைய வாய்ப்புகள் இல்லாத வகையில் கட்டுப்பாடாக உள்ள நாட்டில் “சந்தேகப்படும் வகையிலான நபரோ, பொருளோ பார்த்தால் உடனே அதிகாரிகளூக்கு தெரியப்படுத்துங்கள்” என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு பொறுப்புமிக்கதாக தமது நாட்டினை கண்காணித்து வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
சிங்கப்பூரின் பிரதான மற்றும் முதன்மை மொழியாக ஆங்கிலம் உள்ளது. அது தவிர மலாய், மாண்டரின்(சீன மொழி), தமிழ் ஆகிய மொழிகள் அலுவலக மொழிகளாக உள்ளது. பேருந்துகள் ரயில்கள் உள்ள அறிவுப்புகள், குறிப்புகள் என அனைத்தும் நான்கு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழனாக இருந்து நமது மொழி சிங்கப்பூர் நாட்டில் அங்கீகாரம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். இங்குள்ள இந்தியர்களில் 55 விழுக்காட்டினர் தமிழர்கள் இருக்கின்றனர். சிங்கப்பூர் பற்றிய மேலதிகத் தகவல்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம், தற்சமயம் சிங்கப்பூரில் நான் கலந்து கொண்டு இரண்டு தமிழ் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
சிங்கை லவண்டர் பகுதியில் அமைந்துள்ள உமறுப்புலவர் தமிழ் மையத்தில் பட்டிமன்றம் நடக்க இருப்பதை அறிந்து சிறீதரன், நடராஜ் ஆகியோருடன் கடந்த ஞாயிறு(அக் 31) மாலை 6 மணிக்கெல்லாம் சென்றோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தீபாவளியின் சிறப்பை உணர்த்துகின்றன, உணர்த்துவது இல்லை எனும் தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்ற கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த கலைக் கழகமானது சிங்கப்பூரில் 50 பட்டிமன்றங்களை சிறப்பாக முடித்து 51வது பட்டிமன்றமாக இது நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக திரு. ஜோதி மாணிக்கவாசகமும் உணர்த்துகின்றன எனும் தலைப்பில் திரு. குமாரசாமி, திருமதி அகிலா, திருமதி நிஷா ஆகியோரும், உணர்த்துவதில்லை எனும் தலைப்பில் திரு அஜ்மீர், செல்வி பல்கீஸ், திரு கோபிநாத் ஆகியோரும் பேசினார்கள். தொலைக்காட்சிகளிலேயே பட்டிமன்றம் பார்த்துப் பழகிப்போன எனக்கு இந்த நேரடிப் பட்டிமன்றம் கலகலப்பான அனுபவத்தைத் தந்தது. நடுவர் தான் சும்மா உட்காருந்து தான் இருக்கப்போகிறேன் என ”சும்மா..சும்மா..” என விசுவின் பாணியில் ஆரம்பத்திலேயே கலகலப்பூட்டினார். அடுத்து ஆரம்பித்த குமாராசாமியில் ஆரம்பித்து அனைவருமே யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை எனச் சொல்லும் வகையில் தங்களின் பேச்சுத் திறமையையும், வாதத் திறமையையும் வெளிக்காட்டினார்கள்.
இறுதியில் பார்வையாளர்கள் இருவர் யாராவது கருத்துச் சொல்லலாம் என வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவராக நான் எழுந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளானது தொலைக்காட்சி இல்லாத சமயங்களில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய்க் குளியலிட்டு, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்புக்கள் சாப்பிட்டு, நண்பர்கள் பார்த்து, உறவுகள் கூடிக் கொண்டாடிய நிலையை நம்மில் இருந்து மறைத்து நம்மை தொலைக்காட்சிக்கு முன் அமரவைத்து காசு சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நடத்துகிறார்கள் தவிர, தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனும் கருத்தைக் கூறினேன். நடுவர் தனது முடிவுரையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நமக்குள் மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் தீபாவளியின் சிறப்பை உணர்த்துவதில்லை எனத் தீர்ப்பு கூறினார்.
இன்று மாலை 6 30 மணிக்கு கவிஞர் ந.வீ. விசயபாரதியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது என்பதனை தங்கமீன்.காம் எனும் இணையதளத்தின் மூலம் அறிந்தேன். அலுவலகம் முடித்து நேராக செரங்கூனில் அமைந்துள்ள பி.ஜி.பி மணிவிழா மண்டபம் சென்றேன். ந.வீ.விசயபாரதி அவர்களைப் பற்றி அதிகம் எனக்குத் தெரியாது எனினும் அவரது வலைத்தளம், சிறுகதைகள் என வெளிவந்தது பார்த்து ஓரளவு தெரிந்து வைத்திருந்தேன். மேலும் விபரங்கள் தெரிந்தால் அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன். பூட்டுக்கள், புலமைக்கு மரியாதை, பூக்கள் உடையும் ஓசை எனும் மூன்று நூல்கள் பற்றிய ஆய்வுரையை தங்கமீன் மணிமாறன், சோமசுந்தரம், விஜி ஜகதீசன் ஆகியோர் பேசினார்கள். மனித மனங்களுக்குள் நம்பிக்கையின்றி மனித நேயங்களை பூட்டி வைத்திருக்கும் மனிதர்கள், அந்தப் பூட்டுக்களை புறக்கணிக்க வழிகள் எனும் வகையில் அமைந்துள்ள கவிதைகளை பூட்டுக்கள் நூலிலும், இலக்கியங்களில் கவஞர்கள் கூறியவற்றினை எளிய தமிழில் விளக்கும் வகையில் புலமைக்கு மரியாதை நூலும், தமிழ், காதல், தாய், இயற்கை, கோபம், மனம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கவிதைகளாக பூக்கள் உடையும் ஓசை நூலும் அமைந்துள்ளதை உரையாற்றிய ஆய்வுரையின் மூலம் அறிய முடிகிறது.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்பளிப்பாய் கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், கேரட், ஆப்பிள் அடங்கிய பை ஒன்று கொடுத்தது புதுமையாகவும், சிறப்பாகவும் அமைந்தது. இம்மாதிரியான விழாக்கள் மனதிற்கு மகிழ்ச்சியாகமும், தமிழின் சுவையை, உரையை, நுட்பங்களை அறிவதற்காகவும் இனிமையாக அமைந்து விடுகின்றன. இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற நேரங்களில் சென்று கலந்துகொள்ள வேண்டும் எனும் ஆவலையும் ஏற்படுத்துகிறது. மற்றொருமொரு கட்டுரையில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
தற்சமயம் சிங்கப்பூரிலிருந்து....

அனைவருக்கும் இனிய வணக்கம்,
எனது வலைப்பக்கத்தில் வலைப்பதிவேற்றி அதிக நாட்கள் ஆகின்றது. வேலைப்பணி காரணமாகவும் மற்றசில தனிப்பட்ட காரணங்களினாலும் செய்ய முடியாததாகி விட்டது. நான் பெங்களூரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள். ஆனால் தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணிப்பொறி நிபுணராய் பணியாற்றி வருகிறேன்.
சிங்கப்பூர் உங்களனைவருக்கும் அறிமுகமான நாடு. சுத்தமான, சுகாதாரமான, மிகவும் கட்டுப்பாடுள்ள நாடு எனக் கேள்விப்பட்டிருப்பீர்களெனினும் நமக்கான சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் மொழியை அலுவலக மொழியாகக் கொண்டுள்ள நாடு. ஆக நம்ம ஊரில் இருப்பதைப் போன்றதொரு நினைவை நம்முள் நிறுத்தும் பண்பான நாடு சிங்கப்பூர். இந்த மாதம் அக்டோபரில் இருந்து இங்கே பணிசெய்து வருகிறேன் எனபதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் சிங்கப்பூர் பற்றிய பதிவுகள்...
நன்றி வணக்கம்.
லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுமைக்கு வித்திட்ட வேலூர் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு
கடந்த 1ம் தேதி வேலூர் ஊரிசு கல்லூரியில் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு சிறப்பான முறையில் நடைப்பெற்றது.
இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கினை விசுவல் மீடியா குழுமம், மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஊரிசு கல்லூரியின் கணினித்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் வேலூர் , கிருஷ்ணகிரி , சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏரளமான மாணவ, மாணவியர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் 350 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டர். இதில் பெரும்பாலோனோர் வேலூரை சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள்.
மேலும் பல ஊர்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் சிலர் காலை 6 மணிக்கெல்லாம் ஊரிசு கல்லூரி வளாகத்திற்கு வந்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் நாளான ஞாயிறு அன்று அதிகாலை 5 மணிக்கு இணையத்தில் தகவல்களை கண்டு ஒரு நண்பர் அப்போதே சென்னையில் இருந்து புறப்பட்டு விழாவில் கலந்துகொண்டார்.
காலை 9 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. உபுண்டு தமிழ்குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இராமதாசன் கலந்துகொண்டு லினக்ஸ் பற்றியும் அதை எவ்வாறு நிறுவுவது என்றும் பயிற்சி அளித்தார்.
மாணவ, மாணவியர்கெல்லாம் ஏற்கனவே லினக்ஸ் பற்றி தெரிந்திருந்தது என்றாலும் அவர்களுக்கு முறையாக நிறுவுவது மற்றும் நிறுவும்போது ஏற்படும் பிரச்னைகள், பயன்பாட்டு ப்ரசனைகள் போன்றவற்றில் ஏராளமான சந்தேகங்கள் கேட்கப்பட்டன. மேலும் மாலையில் அடியேன் சைபர் கிரைம் பற்றியும் அதனால் ஏற்படும் ப்ரச்னைகள் பற்றியும், நம்முடைய மின்னஞ்சல்களை எப்படி பாதுகாப்பது என்றும் விளக்கினேன். அப்போது சமீபத்தில் தொழில்நுட்ப வலைப்பதிவாளரான திரு.சூர்யாக்கண்ணன் அவர்களின் ஜிமெயில் முகவரி திருடப்பட்டது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர்கள் தங்கள் கல்லூரிகளில் லினக்ஸ் பயனர் குழுமத்தை ஆரம்பிக்க உள்ளோம் என்று ஆர்வத்துடன் கூறினார்கள்.
இதில் குறிப்பிட்டத்தகுந்த விசயம் என்னவெனில் கணினியில் தமிழ் பற்றிய நிறைய மாணவ/மாணவியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே கணினியில் தமிழ் உருவான விதம் மற்றும் கணினியில் தமிழ் சார்ந்த பயன்பாடுகள் பல பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் விவரித்து எடுத்துரைத்தோம்.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு லினக்ஸ் விளக்க கையேடும், அரசின் சிடாக் -ல் இருந்து வெளிவரும் பாஸ் லினக்ஸ் டிவிடி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு பற்றி மாணவ/மாணவியர்களிடம் கேட்டறிந்தபோது, நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்றும், ஓபன் சோர்ஸ் என்றால் என்ன என்று அறிந்துகொண்டோம் என்றும், இதுபோன்று இன்னமும் பயிலரங்குகளை தொடர்ந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இறுதியாக மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் மற்றும் சைபர் கிரைம் கருத்தரங்கு

இந்திய சுதந்திரத்திற்கே வித்திட்ட வேலூரில் வரும் ஆக 1ம் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கினை இணையம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் விசுவல் மீடியா நிறுவனம், வேலூரில் உள்ள மேக்சிமைஸ் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.
வேலூர் ஊரிஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள காப் வளாகத்தில்நடைபெறும் இக்கருத்தரங்கில் கட்டற்ற (open source) மென்பொருள்களின் அறிமுகம், அதனுடைய அவசியம் விளக்கப்படவுள்ளது. அடுத்ததாக லினக்ஸ், நம் அரசின் சார்பில் சீடாக் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு உள்ள பாஸ் லினக்ஸ் இயங்கு தளம், பெடோரா லினக்ஸ், உபுந்து போன்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றை கணிப்பொறியில் எவ்வாறு நிறுவுவது, பயன்படுத்துவது எப்படி என்பன போன்ற விபரங்களையும் விளக்கப்படவுள்ளது. லினக்ஸ் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு உண்டாகும், அவற்றிலுள்ள மேலும் பயன்படுத்ததக்க வகையிலுள்ள மென்பொருள்கள் பற்றியும் அவற்றை விளக்கவும் உள்ளனர். இப்பயிற்சியினை சென்னையில் அமைந்துள்ள கட்டற்ற மற்றும் திறந்த மூலமென்வள தேசிய மையத்தின் திட்டப்பொறியாளர் ராமதாஸ் அவர்கள் வழங்கவுள்ளார்.
பெருகிவரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து தனிநபர் பாதுகாப்புகளை எப்படி ? அவ்வாறு ஏதேனும் நடந்தால் அவற்றை சமாளிப்பது எப்படி என்று விரிவாக விளக்கப்பட உள்ளது.
இறுதியாண்டுகளில் படிக்கு மாணவ/மாணவிகள் தங்கள் பிராஜெக்ட்களை கட்டற்ற நிரல்களை கொண்டு எப்படி உருவாக்குவது என்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.செல்வமுரளி,திரு.தியாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : இக்கருத்தரங்கம் அதிக விலை கொடுத்து ஆபரேடிங் சிஸ்ட உரிமையை வாங்க முடியாமல் அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தனிநபர் கணிப்பொறி பயனாளர்கள், இணைய மையங்கள், கடைகளில் கணிப்பொறி பயன்படுத்துவோர்கள், சிறுதொழில் கூட கணிப்பொறி பயனாளர்கள், தொழிற்சாலைக் கணிப்பொறி பயனர்கள் பலருக்கும் இந்த கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தம் கணிப்பொறிகளில் தைரியமாய் நிறுவி, சுதந்திரமாய் செயல்பட முடியும் என நம்புகிறோம்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தார். இந்த கருத்தரங்கின் போது ஓப்பன்சோர்ஸ் மென்பொருட்கள் அடங்கிய டிவிடி அனைவருக்கும் விநியோக்கப்பட உள்ளது .
மேலும் விபரங்களுக்கு 99430-94945, 96000-75672
இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!
பெங்களூரு மே 23, இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேவ் தமிழ் பெங்களூரு கிளை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் மற்றும் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கமும் இணைந்து நடத்திய இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகம் மற்றும் இந்திய முதலாளிகள் சம்மேளனத்திற்க்கும் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. இராசன் (தலைவர் .கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்), திரு.பாலன் (கர்நாடக உயர் நீதி மன்ற வழக்கறிஞர்), திரு. சிவ சுந்தர் (கன்னட ஊடகவியலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் ஊடகவியளாலர் திரு.சிவ சுந்தர் , உலக ஊடகவியாளர்கள் இலங்கை அரசின் போர்குற்றத்தை வெளிக்கொணரும் இவ்வேளையில் இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை கொழும்பில் நடத்துவதன் மூலம் இனவெறி பிடித்த இலங்கை அரசை, நல்லரசு என்று நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அப்பாவி தமிழர்களின் மீது பிரயோகித்து கொன்று குவித்த இனவெறி அரசுடன் இந்திய அரசு கொண்டுள்ள உறவானது, இந்தியர்களும் தமிழன படுகொலையில் பங்கேற்றதாக பொருள் கொள்ளவும், இந்தியர்கள் அனைவரது கரங்களிலும் தமிழர்களின் இரத்தக்கறை படிந்துள்ளது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பாலன் அவர்கள், கொள்ளை அடிப்பதும், கொன்றொழிப்பதும் ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளாக உள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பில் உள்ள வளங்களை கொள்ளை அடிக்க, அங்குள்ள மக்களனைவரையும் நக்சல்கள் என்ற போர்வையின் கீழ் கொன்றழிப்பதை போல, தமிழர் நிலங்களை இந்திய வர்த்தக முதலாளிகள் கொள்ளை அடிக்க இனவெறி சிங்கள அரசுடன் சேர்ந்து இந்திய ஏகாதிபத்தியம் இணைந்து அங்கு வாழ்ந்த தமிழர்களை தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தி கொன்று குவித்தனர். உலக அரங்கில் இலங்கையின் போர் குற்றம் வெளிப்பட்டால் இந்தியாவின் கூட்டு சதியும் வெளி வருமென்ற அச்சத்தில் இந்திய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளான திரை உலகின் உதவியுடன் இலங்கையில் அமைதி நிலவுவதாக ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் எனக் கூறினார்.
அதன் பிறகு பேசிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் இராசன், அப்பாவி தமிழ் பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் நச்சுக் குண்டுகள் வீசி கொலை செய்த கொடும் சிங்களவர்களை புறக்கணிக்க வேண்டியது தமிழர்கள் மாத்திரமல்ல மாந்த நேயம் உள்ள அனைவரது கடமையாகும். உலகத்தாரிடமிருந்து சிங்களவர்கள் செய்த இனப்படுகொலையை மறைக்க முனையும் இந்திய அரசு இந்திய திரைப்பட துறையின் மூலம், அவர்களின் விருது வழங்கும் விழாவை கொழும்பில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்துள்ளது. அதே போல உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடமிருந்து மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மறக்கடிக்க இனத்துரோகி கருணாநிதியின் தலைமையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. உலகங்கிலும் வாழக்கூடிய தமிழர்கள் இலங்கையை புறக்கணிக்கும் அதே வேளையில், துரோகிகளால் நடத்தப்படும் செம்மொழி விழாவையும்,விருது வழங்கும் விழாவில் பங்கு கொள்ளும் திரை உலகினரையும் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் நிகழ்வில் கீழ்காணும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
1. விருது வழங்கும் விழாவின் இடத்தை மாற்று
2. இந்திய முதலாளிகள் சம்மேளனமே, இனப்படுகொலை நடந்த நாட்டோடு வர்த்தக உறவு கொள்ளாதே
3. கமல் ஹாசன் அவர்களே இனப்படுகொலை செய்த நாட்டோடு வர்த்தக உறவு கொண்டுள்ள FICCI யின் பொழுதுபோக்கு துறைத் தலைமை பதவியிலிருந்து விலகுங்கள்.
4. அமிதாப் மற்றும் சல்மான் கான் அவர்களே தமிழர் இரத்தக்கறை படிந்த இலங்கையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவை புறக்கணியுங்கள்.
5. மாந்த நேயமுள்ள சமூகமே போர்குற்றம் புரிந்த இலங்கை புறக்கணியுங்கள்.
பாலிவுட்டுக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்
இலைங்கையில் போர் எனும் பெயரில் தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகின்ற இந்நேரத்திலும், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணப் பணிகளையும் செய்து முடிக்காத இலைங்கையை கண்டிக்க வக்கின்றி இலங்கைப் பொருளாரத்தை முன்னேற்றும் வகையிலும், போர்க்குற்றங்களை மறைக்கின்ற வகையில் இந்தித் திரைப்பட விருது விழாவான ஐஐஎஃஃப்ஏ 2010 ஐ கொழும்புலிருந்து மாற்றக்கோரி கர்நாடகா தமிழ் மக்கள் இயக்கமும், தமிழர் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து இப்போராட்டத்தை நடத்துகின்றன.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய எதிர்ப்புக்கிற்கு வலுசேர்க்க வரவேற்கிறேன்.
