ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள்
பார்த்ததும்..ஈர்த்ததும்...(3)இது ஓர் புதுமையான போராட்டம் அல்ல.. புதுமையானவர்களின் போராட்டம். உள்நாட்டில் இனம்,மொழி, உறவு, சாதி என எதையும் பாராது பாலினத்தின் அடையாளமின்றி அங்கீகாரமின்றி ஒடுக்கப்பட்ட ஓர் இனம் வெளிநாட்டில் ஒடுக்கப்பட்டும் சிங்கள இனவெறிச் செயலில் கொலையாகிக் கொண்டிருக்கும் தம் இனத்திற்கு ஆதரவாய் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம்.
ஆம் நண்பர்களே,
சென்னை சேப்பாக்கத்தில் திசம்பர் 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் உள்ள திருநங்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்துடன் ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். இப்போராட்டத்தை நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இப்போராட்டத்தில் திருநங்கைகள் தவிர ஏராளமான பத்திரிக்கையாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என சிறப்பாக போராட்டம் நடைபெற்றது.
அவ்வப்போது திருநங்கைகள் அவர்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் முதன் முதலாக ஈழத்தமிழர்களுக்காக திருநங்கைகள் போராட்டம் நடத்தியிருப்பது மிகுந்த பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும். கல்வி, வேலைவாய்ப்பு, ஊடகம், சமூகபணி என மெல்ல மெல்ல அவர்களின் பார்வைகளும், பணிகளும் திரும்பியிருப்பது ஓர் நல்ல முன்னேற்றத்தை திருநங்கைகளுக்கு, அவர்களின் தவறான பார்வையை வீசும் சமூகத்திற்கும் தருகிறது.
சகோதரி என்னும் இதழை நடத்தி வரும் கல்கி, சுடர் எனும் அமைப்பின் செயலாளர் பிரியா பாபு, விஜய் தொலைக்காட்சி புகழ் இப்படிக்கு ரோஸ், லிவிங் ஸ்மைல் வித்யா எனும் ஊடகங்களுக்கு தெரிந்த முகங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்கி பேசுகையில் பலதுறைகளில் முன்னேறி வரும் திருநங்கைகளை புறக்கணிக்காமல் ஆதரவுக்கரம் கொண்டு அவர்களையும் சமூகத்தில் ஒரு மனிதராய் பாருங்கள் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் இனவெறியுடன் நடந்து கொண்டு தமிழ் மக்களை அழிக்கும் சிங்கள அரசுக்கும் கண்டனம் செய்தார். லிவிங் ஸ்மைல் வித்யா ஓர் நல்ல எழுத்தாளர் என்பதால் அதிகம் பேசுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் சுருக்கமாக முடித்துக் கொண்டார். பின்னால் பேசிய சில திருநங்கைகளும் தாங்களின் வலிகளையும், வேதனைகளையும் கூறியதோடு தமிழர்களுக்காக தாம் கொடுக்கும் நோக்கத்தையும் கூறினர். அவ்வப்போது ஒப்பாரிப் பாட்டுக்களையும் பாடினர், அப்பாட்டுக்களின் முழு வரிகளும், வலிகளும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.
சினிமா கலைஞர்களான தயாரிப்பாளர் வி.சேகர், ஆர்.கே.செலவமணி, தமிழ் ஆர்வலர் தியாகு, ஜெகஸ்தர் திருநங்கைகளை பாராட்டி பேசியதோடு ஈழத்தமிழர்களை ஆதரித்தும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டித்தும் பேசினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் தாம் பிரதமரை சந்தித்த போது நடந்த சம்பங்களை விளக்கி தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிற நடுவண் அரசையும், ஏதோ ஒருவன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்து வந்திருப்பது போல் கொடுத்து வந்திருப்பதையும், இயலாமையின் விளிம்பில் தமிழக தலைவர்களும், தமிழனும் இருக்கிறான் என்பதை தோலுரித்து மிகுந்த வேதனையுடன் சொன்னார். அத்துடன் தமிழகத் தலைவர்களை விமர்சித்த இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவையும் கண்டித்தார். மாலை ஐந்து மணி அளவில் திருநங்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.
பரவலான அறிவில்லாமல் தம் சிறு அறிவிலிருந்து விமர்சிப்பவர்களுக்கு மத்தியிலும், பதவி சுகங்களுக்காகவும், சுயநல விரும்பிகளாகவும் ஈனத்தனமாய் ஈடுபடும் ஒரு சில நபர்களிலிருந்து, அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு ஒற்றுமையுடன் தம் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகைகளுக்கு குரல் கொடுக்கும் இத் திருநங்கைகளின் வலிகளை உணர்வோம், வாய்ப்பளிப்போம் !
0 மறுமொழிகள்:
Post a Comment