பூம்புகார் ப்யணங்களில்.. - Journey to Poompuhar
சிதம்பரம் அண்ணாமலைப்பலகலைக்கழகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கை முடித்துக்கொண்டு ஒரிசா பாலு அவர்களின் அழைப்பின் பேரில் பூம்புகார் செல்ல முடிவெடுத்தோம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முனபு கல்லூரி படிக்கையில் திருமணம் ஒன்றிற்காக சிதம்பரம் சென்று விட்டு பூம்புகார் சென்றிருக்கிறேன். அப்போது செல்லும் பொழுது மாலையாகி விட்டதால் வெறும் கடற்கரையை மட்டும் ரசித்து விட்டு ஒரே ஒரு நிழற்படம் எடுத்து வந்ததாய் ஞாபகம். ஒரிசா பாலு அவர்கள் கடலாய்வுப்பணியில் மேற்கொண்டு வருகிறார். நாகர்கோவில் இணையப்பயிலரங்கில் சந்தித்த போது கன்னயாகுமரியில் கடலாய்வு மேற்கொண்டிருந்தார். சிதம்பரம் பயிலரங்கில் கலந்து கொண்ட போது பூம்புகாரில் கடலாய்வும், வரலாற்று ஆய்வாகவும் சில பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாயிருந்ததால் நானும் செலவமுரளியும் அவருடன் பூம்புகார் செல்ல ஆர்வமுடன் இருந்தோம்.
”படங்களைச் சொடுக்கி பெரிதுபடுத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்”
பூம்புகாரில் பிறந்தவரும், பல ஆய்வுப்பணிகளை மேற்கொண்டவருமான புலவர் நா.தியாகராசன் அவர்கள் ஒரிசா பாலு அவர்களுடன் ஆயவு உதவிக்காக வந்திருந்தார். நால்வரும் மாலை 6 மணிக்கு கிளம்பி சிதம்பரத்திலிருந்து கருவி சென்று, பின் பூம்புகார் இரவு 9 மணிக்குச் சென்றடைந்தோம். பூம்புகாரிலுள்ள தமிழகம் உணவு விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு ஏற்கனவே ஏற்பாடாகியிருந்த அரசு விருந்தினர் மாளிகையினில் தங்கினோம். விருந்தினர் மாளிகை அறை மிகவும் பிரதானமாகவும் அழகுற க்டற்கரையின் மிக அருகில் அமைந்திருந்தது.



இனிய கடல்காற்றை ரசித்தபடி பேசிக்கொண்டே கடற்கரை மணலில் நடந்தபடி சூர்ய உதயத்திற்காக காத்திருந்தோம். இதற்கிடையே நானும், செல்வமுரளியின் கடலலைகளில் கால்களை நனைத்து கடல்செல்வங்களை அள்ள முயன்று கொண்டிருந்தோம். சிப்பி, சங்கு போன்றவைகளை அலையூனோடே கை, கால்களினால் அரவணைத்து கைப்பற்றி கரையில் ஒதுக்கி சேமிக்கலானோம். மேகங்களின் மறைவினில் உதித்த சூரியன் ஆறுமணியாகியும் கண்களில் தென்படவில்லை.


காலை 6 30 மணியளவில் தம் செந்நிற கதிர்களைப் வானில் பரப்பி தன்னிகரில்ல தன்மையுடன் எழுந்த சூரியன் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளித்தது. மேலெழும்பிய சூரியனை பிடிப்பது போல், தாங்குவது போல் அமைந்த நிழற்படங்களை ஒரிசா பாலு அவர்கள் அழகுற எடுத்தார். நிழற்பட எடுக்க கேமரா கொண்டு


வரவில்லையாததால் என்னுடைய 2MP கொண்ட பிளாக்பெர்ரி மூலம் எடுத்துத் தள்ளினோம். தேவையான அளவு நிழற்படங்களையும், கடலலைகளையும், சூரிய உதயத்தையும் ரசித்து விட்டு, கைப்பற்றிய சிப்பிகளுடன் விடுதி செல்ல தயாரானோம். வழியில் கலைங்கரை விளக்கமும், அழகுற வடிவமைக்கப் பட்டிருந்த விளக்குத்தூண் அருகிலும் நின்று நிழற்படம் எடுக்கத் மறக்கவில்லை.




சிறிது தூரத்தில் சாலையின் இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் உள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்திருந்தன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கபெற்று கண்கவர் காட்சியாய் அமைந்திருந்தது.


இக்கலைக்கூடத்தில் சிலம்பு வடிவ குளம், 3 மீட்டர் உயரமுள்ள கண்ணகி சிலை, 2.75 மீட்டர் வடிவ மாதவியின் சிலை, சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளின் சிலை, சோழ ஆட்சி புரிந்த கரிகால் சோழனின் சிலை மற்றும் சிலப்பதிகாரக் கதையில் வரும் 49 நிகழ்ச்சிகள் கல்லில் வடிவமைக்கப்படுள்ளன.



அங்கிருந்து சிறிது தூரத்தில் சாலையின் வலதுபுறத்தில் பேருந்து நிலையமும் சிலம்பு வடிவில் அமைந்திருந்து. ஆனால் அவை இன்னும் கட்டி முடிக்கப்படாமல் பயன்பாடின்றி காணப்பட்டுள்ளது. அதன் பின் தேநீர் அருந்திவிட்டு வரும் வழியில் அகழ்வியல் நிலையம் என்றழைக்கப்படும் அரிய பொருட்களை உடைய நிலையத்திற்குச் சென்றோம். அங்கு பூம்புகார நகரின் பலபகுதியில் கிடைக்கப்பெற்ற அரிய வகைப் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கபட்டிருந்தது. பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிலம்புகள், மணிகள், பாசிகள், புலித்தோற்றம் கொண்ட படகுகள், ஓடங்கள், கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், ஆவணங்கள், கிடைத்த பொருள்களின் பட்டியல்கள், கல்வெட்டுக்கள், இலக்கியக் குறிப்புகள், பூம்புகார் பற்றிய நூல்கள் பட்டியல்கள், படகுத்துறை படங்கள், 2 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய சிப்பி, வெளிநாடுகளில் கிடைக்கப்பெற்ற தமிழ்க் கல்வெட்டுக்கள், 7 ம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்ற அய்யனார் சிலை, 7ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, 5ம் நூற்றாண்டு நங்கூரம் என அரிய வகைப் பொருட்களை உள்ளடக்கியதாய் அமைந்துள்ளது.




இவையனைத்தையும் பார்த்து ரசித்தி விட்டு, ஒரிசா பாலு அவர்கள் மேலும் பல ஆராய்வு பணிகள் இருந்தமையால் நானும், செல்வமுரளியும் காலை 10 மணியளவில் பூம்புகாரை விட்டு கிளம்பிச் சென்றோம். பார்க்கவேண்டிய மேலும் பல இடங்களைக் காணும் வாய்ப்பை நேரமின்மையால் இழந்து வேறொரு நாள் வந்து பார்க்கலாம் எனும் எண்ணத்தில் பூம்புகாரிலிருந்து இனிய நினைவுகளுடன் கிளம்பிச் சென்றோம்.

4 மறுமொழிகள்:
படங்கள் அனைத்தும் அருமை...
நல்ல பகிர்வு .நிழற்படங்கள் அனைத்தும் அருமை.....
உங்களுடையது ஒரு அழகான பயணம் .. நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு புனிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3
உங்களுடையது ஒரு அழகான பயணம் ..என் நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன் கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு பு னிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3
Post a Comment